ஆத்தாடி ஆத்தா..15 மாவட்டத்துக்கு தீவிர வெப்ப அலை வார்னிங்.. ஆரஞ்சு + மஞ்சள் அலர்ட்டால் அலறும் மக்கள்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று 15 மாவட்டங்களில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் கொடுத்திருக்கிறது.
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில்தான் வெயில் அதிகரிக்கும். ஆனால், இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்த ஆண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மழை குறித்து மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வெயிலின் தீவிரம் குறையவில்லை. நேற்று மட்டும் 21 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்திருக்கிறது. அதாவது,
கரூர் பரமத்தி - 111.2
வேலூர் - 110.66
ஈரோடு - 110.48
திருச்சி - 109.58
திருத்தணி - 108.05
சேலம் - 106.07
தருமபுரி - 106.7
திருப்பத்தூர் - 106.52
மதுரை விமான நிலையம்- 106.52
மதுரை நகர் - 106.52
தஞ்சாவூர் - 105.8
நாமக்கல் - 105.8
சென்னை மீனம்பாக்கம் - 105.26
கடலூர் - 104.36
பாளையங்கோட்டை - 104
கோவை - 103.64
சென்னை நுங்கம்பாக்கம் - 102.2
நாகப்பட்டினம் - 102.2
புதுச்சேரி - 100.4
காரைக்கால் - 100.4
அதிராம்பட்டினம் - 99.68
என வெயில் பதிவாகியுள்ளது. முன்னதாக நேற்று வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மே.3ம் தேதி தொடங்கி 5ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே.6 மற்றும் 7ம் தேதிகளில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில், இன்று தொடங்கி அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். மே.3ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°-43° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38°-40° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°-39° செல்சியஸ் இருக்கக்கூடும்" என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
கிருஷ்ணகிரி
தருமபுரி
கள்ளக்குறிச்சி
பெரம்பலூர்
ஈரோடு
கரூர்
நாமக்கல்
என 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது வானிலை மையம். இதுதவிர 8 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது
திருப்பூர்
கோவை
ராணிப்பேட்டை
வேலூர்
திருப்பத்தூர்
சேலம்
திருவண்ணாமலை
திருச்சி
ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications