குற்றாலத்தில் 6வது நாளாக குளிக்க தடை.. கடல் கொந்தளிப்பால் தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
தென்காசி: தென்காசியில் அதிகாலை முதல் மழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றால அருவிகளில் இன்று 6வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்று காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இன்று தேனி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தான் இன்று காலை முதல் தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், புளியங்குடி, செங்கோட்டை மற்றும் அதனை சுற்றிய பல இடங்களில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் குற்றாலம் பழைய அருவி, மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகிறது. ஆனால் மழை தொடர்வதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் பொதுமக்கள் குளிக்க இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 17ம் தேதி பழைய குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளித்தபோது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மக்கள் அடித்து செல்லப்பட்டனர்.
அதிர்ஷ்டவசமாக பலர் தப்பிய நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த அஸ்வின் (17) என்ற சிறுவன் உயிரிழந்தார். இந்த உயிர் பலியை தொடர்ந்து குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு வந்தது. இன்றும் தடை நீடிக்கிறது. இதன்மூலம் இன்றோடு சேர்த்து குற்றால அருவிகளில் குளிப்பதற்கான தடை என்பது 6வது நாளாக தொடர்ந்து வருகிறது.
அதேபோல் தமிழகத்தில் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று தனுஷ்கோடி. ராமநாதபுரம் மாவட்டத்தில் தனுஷ்கோடி அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தான் கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்று உள்ளிட்டவற்றால் தனுஷ்கோடி கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி தொடர் கோடை மழையால் தமிழகத்தில் உள்ள அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணைகளுக்கான நீர்வரத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளை அனுமதிக்காத வகையில் கொடிவேரி அணையும் மூடப்பட்டுள்ளது.
இதுதவிர கடல் சீற்றம் காரணமாகவும், வானிலை முன்னறிவிப்பாலும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. கேரளா கடலோரப்பகுதிகள், மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கர்நாடகா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்ற மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை மீனவர்கள் 6வது நாளாக இன்று கடலுக்கு செல்லவில்லை. அதேபோல் தூத்துக்குடி மீனவர்களும் பாதுகாப்பு கருதி இன்று கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications