காலியாகும் தாம்பரம்.. அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறும் மக்கள்! ‛ரெட் அலர்ட்’டால் வந்த சிக்கல்
சென்னை: சென்னைக்கு இன்று மற்றும் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் மழை தொடர்ந்து அதிகரித்து நாளை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் தாம்பரம் அருகே அடையாறு ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.
சென்னையில் இன்றும், நாளையும் 2 நாட்கள் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நேற்று முதல் தொடர்ந்து சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சென்னையின் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீரை விரைவாக வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் இந்த கனமழைக்கு முக்கிய காரணம் வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தான். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையவும் வாய்ப்புள்ளது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது நாளை சென்னை மற்றும் தமிழ்நாட்டில் பல இடங்களில் மிக கனமழை என்பது பெய்ய உள்ளது. ஆனால் நாளை தினம் சென்னையை காற்றழுத்த தாழ்வு பகுதி நெருங்க உள்ளது.
இதனால் நேற்று, இன்றைய தினத்தை விட நாளை சென்னையில் கனமழை பெய்ய உள்ளது. இந்நிலையில் தான் சென்னை தாம்பரம் அருகே வசிக்கும் மக்கள் வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருகின்றனர். அதாவது தாம்பரம் அருகே முடிச்சூர் பக்கத்தில் வரதராஜபுரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி என்பது அடையாறு ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சியில் வரதராஜபுரம், புவனேஸ்வரி நகர், அஷ்டலட்சுமி நகர், முல்லை நகர், மகாலட்சுமி நகர், ராயப்பா நகர், ஸ்ரீராம் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் கனமழை பெய்யும்போதும், வெள்ளம் வரும்போதும் இந்த ஏரியாக்களில் மழை நீர் தேங்கும். வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும். இதற்கு முக்கிய காரணம் அடையாறு ஆறு தான் காரணமாகும். அடையாறு ஆற்றில் மழைநீர் அதிகரிக்கும்போது வரதராஜபுரம் ஊராட்சி பகுதிகளில் தண்ணீர் நுழைந்துவிடும்.
தற்போது நேற்று முதல் இன்று வரை கனமழை பெய்தாலும் கூட அடையாறு ஆற்றில் மழைநீர் பிரச்சனையின்றி சென்று வருகிறது. ஆனால் இன்றைய தினத்தை விட நாளை மழை அதிகம் பெய்யும் என கூறியுள்ளதால் மழை வெள்ள அச்சத்தால் பொதுமக்கள் வீடுகளை காலி செய்து வருகின்றனர்.
தரைதளத்தில் வசிக்கும் மக்கள் வீட்டில் உள்ள முக்கிய பொருட்களை மேல்தளத்தில் இருக்கும் வீடுகளுக்கு மாற்றி வைத்துவிட்டு அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர். சிலர் அந்த பகுதியில் உள்ள தங்களின் உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும் நிலையில் பலர் தங்களின் சொந்த ஊர்களுக்கு வெளியேறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications