எங்களுக்கு வேற வழி தெரியல சார்.. முடிச்சூரில் வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மழை பாதிப்பால் தங்களது உடைமைகளை இழந்த பொதுமக்கள் சென்னை முடிச்சூர் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து தற்போது வெளியேறி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, புதுக்கோட்டை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லையில் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலும் நேற்று இரவு பல்வேறு இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய இடி மற்றும் மின்னலுடன் அதிகாலை வரை நீடித்தது. அதிகபட்சமாக சென்னை எண்ணூரில் 6.1 செ.மீ மழை பெய்தது. மீனம்பாக்கத்தில் 5.3 செமீட்டரும், நந்தனத்தில் 4.7 செ.மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 4.2 செ.மீ மழையும் பெய்தது.
சென்னையில் அதிகாலையில் சற்று மழை ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. மழை காரணமாக சென்னை நகரில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி கடல்போலக் காட்சியளிக்கிறது. பல பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் முடிச்சூர் பகுதி மக்கள் தங்களது உடைமைகளை இழந்ததால் பொதுமக்கள் இந்த முறையும் பாதிக்கப்படாது என்பதற்காக வீடுகளில் இருந்து தற்போது வெளியேறி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த ஆண்டு மழை வெள்ளத்தில் எங்களது பொருள்கள் அனைத்தும் போய்விட்டன. வீடுகளுக்கு முக்கால்வாசி அளவுக்கு நீர் தேங்கியதால் அனைத்துப் பொருள்களும் சேதமடைந்தன. கடந்த ஆண்டு அஜாக்கிரதை இருந்ததால் குழந்தைகளின் புத்தகங்கள், சான்றிதழ்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம். வெள்ளத்தில் சென்ற சான்றிதழ்களை திரும்பி வாங்க படாத பாடுபட்டோம்.
அதனால், இந்த முறை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இப்பகுதியில் உள்ள அனைவருமே வீடுகளை விட்டு வெளியேறி வருகிறோம். வீட்டில் உள்ள முக்கியமான பொருள்கள் அனைத்தையும் பாதுகாப்பான இடங்களிலும் வைத்து வருகிறோம். முதல் மாடியில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் பிரச்னை இல்லை. ஆனால், தரைதளத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படும். அரசு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளதால் தற்போது உறவினர்கள் வீடுகளுக்கு செல்லவுள்ளோம்.
வருடா வருடம் இந்தப் பிரச்னையை சந்திக்கிறோம். செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிடாமல் இருந்தால் முடிச்சூர் பகுதி பாதிக்கப்படாது. தண்ணீர் செல்வதற்கு கால்வாய் அமைக்கிறார்கள். ஆனால், ஒரு வருடமாக அடைத்திருக்கும் குப்பைகளை அகற்றப்படாமல் இருப்பதால் மழை பெய்யும்போது இப்பகுதி வெள்ளக்காடாக மாறும் நிலை ஏற்படுகிறது. முறையாக கால்வாய்களைத் தூர்வாருதல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிடாமல் இருந்தால் இப்பகுதி மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
இரவோடு இரவாக கடந்த ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதால் தண்ணீர் தேங்கியதோடு பாம்பு, பூரான், தவளை போன்ற ஜந்துக்கள் வீட்டுக்குள் புகுந்தன. அதனால், குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும். பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்ததால், பொருள்களையோ, சான்றிதழ்களையோ நாங்கள் பத்திரப்படுத்த முடியாமல் போனது. அதனால், இந்த முறை விழிப்புணர்வோடு செயல்பட்டு வருகிறோம் என்றனர்.












Click it and Unblock the Notifications