கொங்கு+தென் மாவட்டங்கள் என எல்லா பக்கமும் சுத்தி அடிக்கும் மழை! அடுத்த 3 மணி நேரம் உஷார்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதாவது, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், நாகை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் மிதமான மழைக்கான மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 16 மாவட்டங்களிலும் இரவு 10 மணி வரை மழை பெய்யும்.

முன்னதாக விடுக்கப்பட்ட வானிலை அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூன்.15) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை (ஜூன்.16) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
ஜூன்.17ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. ஜூன்.17 முதல் 21ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications