பின்னியெடுக்கும் வெயில் .. அடுத்த 6 நாளும் மழை கொட்டும்.. தமிழகத்தில் ஒரே நேரத்தில் கண்ணை கட்டுதே
சென்னை: தமிழகத்தின் சில பகுதிகளில் நாளை முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதேசமயம், 18ம் தேதி வரை உள் மாவட்டங்களில் வெப்பநிலை உயரக்கூடும்" என்றும் வார்னிங் தரப்பட்டுள்ளது.
கோடை காலம் துவங்கி உள்ளது.. வெயில் மண்டையை பிளக்க துவங்கிவிட்டது.. எனினும், கடந்த 2 நாட்களாகவே ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது.. நேற்றைய தினமும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்திருந்தது.

இந்நிலையில், இன்று அதாவது 16ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது..
வறண்ட வானிலை: அந்த அறிவிப்பில் உள்ளதாவது: "வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.. நாளை ஏப்ரல் 17ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 19 தேதிகளில தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப்ரல் 20 மற்றும் ஏப்ரல் 21 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிக வெப்பநிலை: அடுத்த 5 நாட்களுக்குக் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோர பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது, ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது..
வானிலை மையம்: இதனிடையே, சென்னை வானிலை ஆய்வுமையம் மற்றொரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.. அதில், குமரிக்கடல் மற்றும் அதனைஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 18-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் வரும் 18-ம் தேதி வரை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும். நாளை முதல் 18-ம் தேதி வரை உள் மாவட்டங்களில் 106 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும்" என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications