வளிமண்டல கீழடுக்கு சுழற்சி! அடுத்த 3 மணி நேரம்.. சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தென் தமிழகத்தின் மேல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், தஞ்சையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்யவில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தான் தென் தமிழக பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் இதனால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

அடுத்த 3 மணி நேரம்
இந்த நிலையில் இன்று காலையிலேயே டெல்டா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல் காலை 10 மணி வரை கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இன்று கிளைமேட் எப்படி
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை புதன்கிழமை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் எப்படி?
18 ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 19 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகள்: இன்று முதல் 18 ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications