அடுத்த 3 மணி நேரம்! 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. தஞ்சை, திருவாரூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. வானிலை
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர், திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக தஞ்சை மற்றும் திருவாரூரில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒருசில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை உள்ளிட்ட வட கிழக்கு மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக காலை முதல் மதியம் வரை வெயில் அடித்தது. மதியத்திற்கு பிறகு பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. லேசானது முதல் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்தது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக ஆழ்வார்குறிச்சியில் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது. நெல்லை மாவட்டத்தில் காலையில் இருந்து மாலை வரை வெயில் கொளுத்தி எடுத்தது. ஆனால் மாலையில் மழை பெய்தது. ஒரே நாளில் பகலில் வெயிலும், மாலையில் மழையும் பெய்ததால் நெல்லை குளிர்ந்தது. இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று காலை 10 மணி வரை தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோன்று இன்று காலை 10 மணி வரை திருச்சி, கரூர், நாமக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 14 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை முதல் வரும் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 - 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரை இன்று முதல் 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும். இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு ஒருசில இடங்களில் 2 - 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications