சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை கொட்டும்.. சட்டென மாறுதே கிளைமேட்.. இன்றோடு குட்டி பிரேக்!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மாநிலம் முழுக்க நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் இன்றும் கூட மாநிலத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியிருக்கிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை உட்பட வட மாவட்டங்களில் கூடுதலாகவே மழை கொட்டி வருகிறது. இந்த மழை இன்றைய தினமும் தொடரும் என்றே வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வானிலை மையம்
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடதமிழக - புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்து, நேற்று காலை மேலும் வலுவிழந்தது.
இதன் காரணமாக இன்றைய தினம் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை முதல் டிசம்பர் 10 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை நாளை (05-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என பதிவிட்டார்.
வெதர்மேன்
முன்னதாக வெதர்மேன் பிரதீப் ஜான், "சென்னை மற்றும் புறநகரை உள்ளடக்கிய கேடிசிசி பகுதிகளில் கொஞ்சம் மழை பெய்யும். இன்று வெள்ளிக்கிழமை ஓரிரு இடங்களில் குறுகிய அளவுக்கு மழை பெய்யும்.. அதன் பிறகு மழை சில நாட்களுக்கு நின்றுவிடும். தமிழகம் முழுவதும் தேனி, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைப் பதிவாகியுள்ளது. கனமழை எங்கும் பதிவாகவில்லை. வெள்ளிக்கிழமையிலும் மாநிலம் முழுவதும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழையே எதிர்பார்க்கப்படுகிறது; பெரும் மழை இல்லை.
மழை குறையும் என்பதால் வரும் நாட்களில் தமிழக மக்கள் வழக்கம் போல் பணிகளைத் தொடரலாம்; பருவமழை டிசம்பர் 9 அல்லது 10ஆம் தேதிகளில் அடுத்த மழையைக் கொண்டுவரும். கே.டி.சி.சி பகுதிகள் மிதமான மழையைப் பெறுமா அல்லது இடைவெளி தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என பதிவிட்டிருந்தார்












Click it and Unblock the Notifications