காலநிலை நெருக்கடி.. 2024ம் ஆண்டில் அதிக வெப்பம் பதிவு! சர்வதேச விஞ்ஞானிகள் எச்சரிக்கை
நியூயார்க்: இந்த 2024ம் ஆண்டு என்பது முன்னெப்போதையும் விட அதிக வெப்பமானதாக இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த ஆண்டின் மே மாதத்தில் பதிவான வெப்பம் இதற்கு முந்தைய ஆண்டுகளில் பதிவான வெப்பத்தை விட அதிகம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சமீப ஆண்டுகளில் வானிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து சர்வதேச அளவில் ஏறத்தாழ அனைத்து நாடுகளின் விஞ்ஞானிகளும் எச்சரித்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டின் ஒவ்வொரு மாதத்திலும் வெயில் முன்னெப்போதும் பதிவானதை விட அதிகமாக பதிவாகியிருப்பதாக நாசா கூறியிருக்கிறது.

நாசாவின் கோடார்ட் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்பேஸ் ஸ்டடீஸ் (ஜிஐஎஸ்எஸ்) ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து ஆய்வை மேற்கொண்டிருந்தனர். இந்த ஆய்வில் கடந்த 12 மாதங்களில் பதிவான வெப்பம், இதற்கு முன்னர் பதிவான வெப்பத்தை விட அதிகம். அதாவது இந்த 12 மாதங்களில் ஒவ்வொரு மாதங்களிலும் மிக அதிக அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது. இது குறித்து நாசா நிர்வாகி பில் நெல்சன் கூறுகையில்,
“நாம் ஒரு காலநிலை நெருக்கடியை எதிர்கொள்கிறோம் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. அரிசோனா, கலிபோர்னியா, நெவாடா என அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள நாடுகள் இந்த வெப்பத்தை எதிர்கொண்டிருக்கின்றன” என்று கூறியுள்ளார். கடந்த காலங்களில் மனிதர்களின் செயல்பாடுகள்தான் இந்த வெப்பநிலை உயர்வுக்கு காரணம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும், “தொழிற்சாலைகள், பிளாஸ்டிக், வாகன புகைகள் காரணமாக பசுமை இல்ல வாயு உருவாகிறது. இது புவியின் வெப்பத்தை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக இந்தநிலை தீவிரமாக இருக்கிறது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 19ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து வெப்பநிலை உயர்வதன் பாதிப்புகளை உணர முடிகிறது. இதற்கு முன்னரும் கூட இதேபோன்று வெப்பநிலை உயர்வு பதிவாகியிருக்கிறது. கடந்த 2015 மற்றும் 2016க்கு இடையில் 7 மாதங்களில் வெப்பம் அதிக அளவில் பதிவாகியிருந்தது” என்று கூறியுள்ளனர்.
நாசாவின் தலைமை விஞ்ஞானியும் மூத்த காலநிலை ஆலோசகருமான கேட் கால்வின் கூறுகையில், “நாம் மிக அதிக வெப்பமான நாட்கள், வெப்பமான மாதங்கள், வெப்பமான ஆண்டை அனுபவித்து வருகிறோம். வெப்ப நிலை உயர்வுக்கு காரணம் பசுமை இல்ல வாயுக்கள்தான். கடந்த 1951 முதல் 1980 வரை பதிவான வெப்பநிலையை விட கடந்த 12 மாதங்களில் 2.34 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் அதிகமாக பதிவாகியுள்ளது.
அதேபோல 1800-1900 வரை பதிவான வெப்பத்தை விட தற்போது பதிவான வெப்பமானது 2.69 டிகிரி பாரன்ஹீட் அதிகமாகும். நாங்கள் நகரங்கள், கிராமங்கள், கப்பல்கள் என பலவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் தரவுகளை சேகரித்ததிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த உண்மையை கூறியுள்ளோம். எல் நினோ என்பது வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலை சூடாக்குகிறது. இதனால் வெயில் தீவிரமாக இருக்கிறது.
அதேபோல லா நினா பசிபிக் பெருங்கடலை குளிரூட்டுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஆகஸ்ட் இடையே லா நினா உருவாக 49% வாய்ப்பும், ஜூலை மற்றும் செப்டம்பர் இடையே 69% வாய்ப்பும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன” என்று கூறியுள்ளார்.
இந்தியாவை பொறுத்த அளவில் தென் மாநிலங்களில் பருவமழையின் தாக்கம் ஓரளவு இருப்பதால் வெயில் அதிகமாக உணரப்படவில்லை. ஆனால், வட மாநிலங்களில் நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கிறது. கடும் வெயில் காரணமாக தீவிரமான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரா தொடங்கி பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் என வட மாநிலங்கள் முழுவதும் வெயில் தீவிரமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications