காலையிலேயே சென்னையில் சாரல் மழை.. இந்த 7 மாவட்டங்களில் அடுத்து 3 மணி நேரம் மழை கொட்டும்! புது அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாகக் கோடை மழை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான ஒரு வானிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இன்றும் அதிகாலை முதலே பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே அடுத்த மூன்று மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலை முதலே சாரல் மழை பெய்யும் நிலையில், அது அடுத்த 3 மணி நேரத்திற்குத் தொடரும்.
பொதுவாக மே மாதம் கோடைக் காலத்தில் வெப்பம் உச்சத்தில் தான் இருக்கும். ஆனால், இந்தாண்டு அதற்கு நேர்மாறாக வெப்பம் குறைந்தே இருந்தது. குறிப்பாக மே முதல் வாரம் முதலே தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் நல்ல மழை பெய்து வந்தது. சென்னையிலும் கூட மழை பெய்ததால் வெப்பம் குறைவாகவே இருந்தது.

கோடை மழை
அதாவது வழக்கமாக மே மாதம் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் வெப்பம் படுத்தி எடுக்கும். வெளியே செல்லக் கூட முடியாத அளவுக்கு வெப்பம் உச்சத்தில் இருக்கும். ஆனால், இந்தாண்டு எப்போது அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததோ அப்போது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கோடை முழுக்கவே கூட வெப்பம் குறைவாகவே பதிவாகி வந்துள்ளது.
சென்னை மழை
இன்றும் கூட அதிகாலை முதலே சென்னை நகரில் பல இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், கோயம்பேடு, முகப்பேர், அமைந்தகரை உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. சென்னையில் மே மாதம் காலை நேரம் இப்படிச் சாரல் மழை பெய்யும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. இதனால் நகரில் குளிர்ச்சியான வானிலை நிலவும் சூழலில், சென்னைவாசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
7 மாவட்டங்களில் மழை
இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது காலை 10 மணி வரை சென்னை மற்றும் புறநகரில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் நகரில் சில இடங்களில் நீர் தேங்கலாம் என்றும் இதனால் டிராபிக் பாதிப்பும் கூட ஏற்படலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, இன்று காலை ஆபீஸ் கிளம்புவோர் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
மக்கள் மகிழ்ச்சி
சென்னை மற்றும் புறநகரில் காலை முதலே பெய்யும் சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்று காலையே மழை இருப்பதால் நாள் முழுக்க வெப்பம் குறைவாக இருக்கும் என்றே பலரும் எதிர்பார்க்கிறார்கள். மேலும், பலரும் தங்கள் பகுதியில் பெய்யும் இந்த சாரல் மழையை போட்டோவாக எடுத்தும் வீடியோவை பதிவு செய்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications