தூத்துக்குடி, திருநெல்வேலியில்.. 10 ஹெலிகாப்டர்களில் 27 டன் உணவு விநியோகம்! சிவ்தாஸ் மீனா விளக்கம்
சென்னை: தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையால், பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உணவு விநியோகிக்கப்பட்டது என்பது குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கமளித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் இந்த மழை வேகமெடுத்தது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் சட்டென நிரம்பின. மட்டுமல்லாது அதிலிருந்து வெளியேறிய உபரிநீர் ஊருக்குள் பாய்ந்திருக்கிறது. எனவே இந்த மாவட்டங்களின் பெரும்பாலான கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இன்று தூத்துக்குடியில் மழை இல்லை என்றாலும் சில இடங்களில் தேங்கி நின்ற வெள்ளம் இன்னும் வடியவில்லை. வெள்ளத்தில் சில வீடுகள் இடிந்து விழுந்திருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இந்த மழை கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு என்று சொல்லப்படுகிறது. மழை நின்று 3 நாட்கள் ஆகியும், மீட்பு பணிகள் இன்னும் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. இதுவே, இந்த மழையின் தீவிரத்தை உணர்த்துகிறது. இந்நிலையில் மீட்பு பணிகள், நிவாரணம் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இது குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
"மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுடன் முதலமைச்சர் நேரடியாக பேசி பாதிப்புகளை கேட்டறிந்தார். ஸ்ரீவைகுண்டத்திலேயே உணவு சமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரைவாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ளவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்கப்பட்டது. இதற்கான உணவு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தயார் செய்யப்பட்டு, பிரத்தியேகமாக பேக் செய்யப்பட்டு அவை விநியோகிக்கப்பட்டுள்ளன. 10 ஹெலிகாப்டர்கள் சுமார் 27 டன் உணவை விநியோகித்திருக்கின்றன" என கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதலமைச்சர், "திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக (டிசம்பர் 17 மற்றும் 18) பெய்த கனமழை முதல் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கி, அம்மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.
மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பையும், தென் மாவட்டங்களில் தற்போது வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எனவே, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2000 கோடி ரூபாயை அவசர நிவாரண நிதியாக வாழ்வாதார உதவிக்காகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காகவும் வழங்கிட வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications