புரட்டி எடுத்த வடகிழக்கு பருவமழை.. இயல்பை விட 82% அதிகம்! டாப்பில் சென்னை
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இன்று வரை பெய்த மழையை கணக்கிட்டு பார்க்கையில், இயல்பை விட 82% அதிகமாக மழை பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல சென்னையில் பருவமழை இயல்பை விட 69% கூடுதலாக பெய்திருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக உள் மாவட்டங்களிலும் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு 2 பருவங்கள் மழையை கொடுக்கும். ஒன்று தென்மேற்கு பருவமழை. இது ஜூன் மாதம் இடையில் தொடங்கி, அக்டோபர் மாதம் பாதி வரை நீடிக்கும். இந்த காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் நல்ல மழைப்பொழிவை பெறும். கன்னியாகுமரி தொடங்கி தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, மதுரை, கோவை, திருப்பூர், நீலகிரி போன்ற மாவட்டங்கள் மழையை பெறும். அதேபோல அக்டோபர் இடையில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை, கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மழையை கொடுக்கும்.
அந்த வகையில், தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இன்றைய தேதி வரை பெய்த மழையை எடுத்துக்கொண்டால் மழையின் அளவு 82% அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது இந்த காலத்தில் இயல்பாக 108.5 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 197.7 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை, 69% அளவுக்கு மழை கூடுதலாக பெய்திருக்கிறது. அதாவது இந்த காலத்தில் 140.7 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 239 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications