தமிழ்நாடே சூடாகப் போகுது.. 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.. வானிலை மையம் அலர்ட்!
சென்னை: சென்னை உள்பட தமிழ்நாட்டில் வரும் நாட்களில், அதாவது பிப்ரவரி 22 ஆம் தேதி அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காலை நேர பனிமூட்டம் அடுத்த 2 நாட்களுக்கு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதுமே வெப்பநிலை அதிகரித்து வருகிறது, வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. தற்போது தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாத துவக்கத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு, பிப்ரவரி 22 வரை வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் (பிப்ரவரி 17) பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° - 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 18 முதல் 22 ஆம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° - 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (பிப்ரவரி) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை" என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications