மழை + கடும் வெயில்.. தமிழ்நாட்டில் கலவையான வானிலை இருக்கும்! வெதர் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வந்த நிலையில், தற்போது வெயில் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. இருப்பினும் மழையின் தீவிரம் குறையவில்லை. இந்நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு நிலைமை இப்படித்தான் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
நேற்றைய தினம் காலை முதல் சென்னையில் வெயில் அதிகமாக இருந்தது. ஆனால், திடீரென மாலையில் மழை பெய்தது. கோவை, நாமக்கல், ராமநாதபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்திருக்கிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில்,

அடுத்த 7 நாட்களுக்கான முன்னறிவிப்பு:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன்.7 முதல் 9 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன்.10ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன்.11ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும். இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்த அளவில் இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
குறிப்பாக இன்றும் நாளையும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு பகுதிகளில் அசெளகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (05-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (06-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளை பொறுத்தவரை, இன்று தொடங்கி ஜூன்.9ம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை. வங்கக்கடல் பகுதிகளை பொறுத்தவரை,
இன்று முதல் 8 வரை எச்சரிக்கை ஏதுமில்லை. ஜூன்.9ம் தேதி தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
இன்று மத்தியமேற்கு தென்மேற்கு அரபிக்கடலின் ஒருசில பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜூன்.6 முதல் 9 வரை தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடலின் ஒரு சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலையை பொறுத்த அளவில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
வெப்பநிலை நிலவரம்:
அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 39.6° செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தியில் 22.0° செல்சியஸும் வெயில் பதிவாகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. எனினும் ஓரிரு இடங்களில் சற்று உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இயல்பை விட சற்று குறைவாகவும் இருந்தது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications