சம்பவம் இருக்கு! தென் மாவட்டங்களுக்கு தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்.. கனமழை குறித்து அப்டேட்
சென்னை: இன்று முதல் ஜனவரி 5ம் தேதி வரை தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கும், தென் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
மிக்ஜாம் புயலோடு வடகிழக்கு பருவமழை ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது. புயல் முடிந்த பின்னர் இன்னும் மழை எட்டி பார்க்கவில்லை. அதே நேரம் அதிகாலையில் கடும் பனி மூட்டம் நீடித்திருக்கிறது. இந்த வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆண்டின் இறுதி நாட்களில் மற்றும் ஜனவரி முதல் வாரத்தில் சென்னை மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பரவலான பகுதிகளில் மீண்டும் கனமழை செய்யும் என ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் நிகழ்வு, வங்கக்கடல் பகுதியில் நிலவ இருக்கிறது. இது கடல் பகுதியில் மழையை கொடுக்கும். அதேவேளை நிலப்பகுதிக்குள் இந்த நிகழ்வு கடந்து வரும்பொழுதும் மழை இருப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது. சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்யக்கூடும் என ஆய்வு மையம் கனித்திருக்கிறது. இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
29 மற்றும் 30ம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிய இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதே 31 மற்றும் 01ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலர்கள், இன்று முதல் ஜனவரி 5ம் தேதி வரை தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கும், தென் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள எக்ஸ் சோஷியல் மீடியா பதிவில், "5ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை டெல்டா மாவட்டங்களில் மழை இருக்கும். தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும். இந்திய பெருங்கடலில் மேற்கு காற்று, ஈரப்பதமான காற்றுடன் கலப்பதால் இந்த மழை பெய்யும்" என்று கூறியுள்ளார்.
கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிலிருந்து தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் தற்போதுதான் மெல்ல மீண்டும் வரும் நிலையில், மீண்டும் இம்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியாகியிருப்பது, பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications