சென்னையில் கிடுகிடுவென உயரும் வெப்பநிலை.. வேலூரை பின்னுக்கு தள்ளும் திருத்தணி! வெதர்மேன் ‛அப்டேட்’
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று வெயில் உச்சத்தை தொடும் என்று தனியார் வானிலை ஆர்வலரான வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கோடை மிக கடுமையாக இருந்தது. இந்த ஆண்டு இதே போல இருக்கும் என்று பயந்த நிலையில், வெயில் எதிர்பார்த்ததை போலவே தீவிரமாக இருந்தது. வழக்கமாக வட மாவட்டங்களை சுட்டெரிக்கும் வெயில் இந்த முறை கொங்கு மாவட்டங்களையும் சேர்த்து பதம் பார்த்தது. வேலூரை விட ஈரோட்டில்தான் அதிகம் வெயில் பதிவாகியிருந்தது.

இப்படி இருக்கையில் மே மாதம் தொடக்கத்தில் வானிலை அப்படியே மாறியது. தென் மாவட்டங்களில் முதலில் தலையை காட்டிய மழை, பின்னர் வட மாவட்டங்களையும் நனைக்க தொடங்கியது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. சென்னையில் பெரிய அளவில் மழை இல்லை என்றாலும், வட மாவட்டங்களில் மழை பெய்ததால் சென்னையில் ஓரளவு வெயில் குறைந்து காணப்பட்டது.
இது மே மாதமா அல்லது அக்டோபர், நவம்பர் மாதமா என்கிற அளவில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. எனவே சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர். இப்படி இருக்கையில் தற்போது சென்னையில் வெயில் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் வெயில் பதிவாகி வருகிறது.
நேற்று சென்னை மீனம்பாக்கத்தில் 41.9 டிகிரி செல்சியஸ் (107 டிகிரி ஃபாரன்ஹீட்) வெயில் பதிவாகியிருந்தது. அதேபோல திருத்தணியில் 42.5 டிகிரி செல்சியஸ் (109 டிகிரி ஃபாரன்ஹீட்) அளவுக்கு வெயில் இருந்தது.
இந்நிலையில் இன்றும் சென்னையில் வெயில் அதிக அளவில் பதிவாகியிருப்பதாக பிரதீப் ஜான் கூறியுள்ளார். இது தொடர்பாக x தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வெயில் காலை 11 மணியளவில் 40 டிகிரி செல்சியஸை கடந்திருக்கிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தை கடல்காற்று தாக்கியுள்ளது. அதேபோல மீனம்பாக்கத்தை கடல்காற்று தாக்க 90 நிமிடங்களை எடுத்துக்கொள்ளும். மீனம்பாக்கத்தில் வெயில் 42 டிகிரி செல்சிஸை தாண்டும். திருத்தணி 43 டிகிரியையும், வேலூர் 42 டிகிரி செல்சியஸையும் தாண்டும்" என்று கூறியுள்ளார்.
வெயில் அதிகமாக இருந்தாலும், வரும் ஜூன் 2ம் தேதி முதல் சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் வெயில் குறைவாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, "ஜூன் 1 மற்றும் 2ம் தேதிகளில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 3ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications