சென்னையில் 32 டிகிரி வெயில்தான்.. ஆனா “வெட் பல்ப்”.. டெல்லியை விட ஆபத்து அதிகம்! வெதர்மேன் வார்னிங்!
சென்னை: தமிழகத்தில் கோடை மழை குறைந்து வெயில் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாகவும், இது ஆபத்தானது என்றும் தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கோடை மிக கடுமையாக இருந்தது. வழக்கமாக வட மாவட்டங்களை சுட்டெரிக்கும் வெயில் இந்த முறை கொங்கு மாவட்டங்களையும் சேர்த்து பதம் பார்த்தது. வேலூரை விட ஈரோட்டில்தான் அதிகம் வெயில் பதிவாகியிருந்தது.

இப்படி இருக்கையில் மே மாதம் தொடக்கத்தில் வானிலை அப்படியே மாறியது. தென் மாவட்டங்களில் முதலில் தலையை காட்டிய மழை, பின்னர் வட மாவட்டங்களையும் நனைக்க தொடங்கியது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. சென்னையில் பெரிய அளவில் மழை இல்லை என்றாலும், வட மாவட்டங்களில் மழை பெய்ததால் சென்னையில் ஓரளவு வெயில் குறைந்து காணப்பட்டது.
இது மே மாதமா அல்லது அக்டோபர், நவம்பர் மாதமா என்கிற அளவில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. எனவே சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர். இப்படி இருக்கையில் நேற்று சென்னையில் வெயில் 106 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வெயில் அதிகமாக பதிவானது சென்னையில்தான்.
ஜூன் 2ம் தேதி முதல் சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் வெயில் குறைவாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் கூறியிருந்த நிலையில், இன்று சென்னையில் காற்றின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இது மிகவும் ஆபத்தானது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "தென் சென்னை மற்றும் ECR பகுதிகளில் தற்போது 32-38 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது. இத்துடன் காற்றின் ஈரப்பதம் 69% ஆக பதிவாகியுள்ளது. இதனால் வெயில் 63 டிகிரி செல்சியஸ் போல இருக்கும்.
டெல்லியில் சமீபத்தில் 48 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியிருந்தது. ஆனால் அங்கு காற்றின் ஈரப்பதம் வெறும் 25% தான். எனவே அதைவிட சென்னையில் வெயில் ஆபத்தானது" என்று கூறியுள்ளார்.
காற்றில் அதிக அளவு ஈரப்பதம் இருக்கும் நிகழ்வை 'ஈரக்குமிழ் வெப்பநிலை' (வெட் பல்ப்) என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வெப்பம் அதிகமாக இருக்கும் போது நீங்கள் நல்ல நிழல் பகுதியில் இருந்தாலும், பருத்தியால் ஆன ஆடையை அணிந்திருந்தாலும் கூட இந்த வெட் பல்ப் உங்களை கொல்லும் அளவுக்கு ஆபத்தானது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
அதாவது வெயில் அதிகமாக இருக்கும்போது உடலிருந்து நீர், வியர்வை மூலம் வெளியேறும். இதனால் உடல் குளிர்ச்சியடையும். வியர்வையின் பணி இதுதான். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதுதான் இதன் வேலை. ஆனால் இதற்கு காற்றில் ஈரப்பதம் இருக்கக்கூடாது. அப்படி இருந்தாலும் ஈரப்பதம் குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் வியர்வை வேகமாக ஆவியாகும். உடலும் குளிர்ச்சியாக இருக்கும்.
ஆனால், காற்றின் ஈரப்பதம் அதிகமானால், இந்த செயல்முறையானது தாமதமாகும், வியர்வையும் சுரக்காது. இதனால் உடலின் வெப்பநிலை குறையாது. வெயில் அதிகமாக இருந்து நமக்கு வியர்வை வரவில்லை எனில் அது ஆபத்தை ஏற்படுத்தும்.
35 டிகிரிக்கு மேல் வெட் பல்ப் வெப்பநிலை இருந்தால் உடலில் உள்ள வெப்பம் வெளியேறாது. எனவே உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சென்னையில் 32 டிகிரிக்கு வெட் பல்ப் வெப்பநிலை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications