வங்கக் கடலில் சேட்டை! ஒரு வழியாக கிளம்பிய பெஞ்சல் புயல்! டிராவலிங் ரூட் இதுதான்! வெதர்மேன் அப்டேட்
சென்னை: 6 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் குத்த வைத்து உட்கார்ந்திருந்த பெஞ்சல் புயல் தற்போது நகரத் தொடங்கியுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பெஞ்சல் புயலானது ஒரு வழியாக கடலில் இருந்து நகரத் தொடங்கியுள்ளது. விழுப்புரத்தை நோக்கி மேகக் கூட்டங்கள் இருக்கிறது. புயலின் தென்மேற்கு பகுதியில் மட்டும் தற்போது மேக கூட்டங்கள் இருக்கின்றன.

இந்த புயல் மேற்கு திசையை நோக்கி நகரும் போது மேற்கு பக்கம் சென்றுவிடும். மேற்கு வடமேற்கு வழித்தடத்தில் பெஞ்சல் பயணிக்க போகிறது. அதாவது திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூர், திருப்பத்தூர், ஈரோடு வழியாக சென்று மழை பொழிவை கொடுக்கும்.
அது போல் மைசூர், நீலகிரி மாவட்டங்களிலும் மழை பெய்யும். கோவை மாவட்டத்தை போகும் போது லேசாக டச் செய்து விட்டு செல்லும். அங்கும் மழைக்கு வாய்ப்புள்ளது. இது தவிர வழக்கமான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது சிறிய மழை விட்டுவிட்டு பெய்யும். இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 23 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்த நிலைகளை அடைந்து நவம்பர் 29ஆம் தேதி பெஞ்சல் புயலாக மாறியது. இது நவம்பர் 30ஆம் தேதி மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என சொல்லப்பட்டது.
இந்த புயல் உருவாவதில் இருந்தே ஆட்டம் காட்டி வந்தது. இந்த நிலையில் இந்த புயல் இன்றுதான் கரையை கடக்கும் என சொல்லப்பட்டது. பிறகு நேற்று மாலையே கரையை கடக்க தொடங்கியது. இரவு 11.30 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது.
புயல் கரையை கடந்ததும் பலத்த சூறைக் காற்று வீசியது. இந்த புயல் புதுவை அருகே நகராமல் உட்கார்ந்திருப்பதாக சொல்லப்பட்டது. அதாவது அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை அதிலும் வலுக்குறையாமல் இருப்பதால் சற்று அச்சம் ஏற்பட்டது. இந்த நிலையில் புயலானது மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து வடகடலோர தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது புயல் மெதுவாக நகரத் தொடங்கியது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மயிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 51 செ.மீ. மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
புதுவையில் இந்த முறை 47 செ.மீ.மழை பெய்தது. புதுவையை பொருத்தமட்டில் கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபருக்கு பின்னர் தற்போதுதான் கனமழை பெய்துள்ளது 2004ஆம் ஆண்டு புதுவையில் 21 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதற்கு பின் பதிவான மிக அதிக கனமழை இதுதான்.
புதுவையில் நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இன்றும் புதுவைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications