தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்த வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் அனாவசியமாக வெளியில் செல்ல என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக மாசி மாதத்தைவிட பங்குனி பிறந்தால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இன்று முதல் மார்ச் 22-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை குறைவாக இருக்கக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
வழக்கத்திற்கு மாறாக வட இந்தியாவில் இருந்து வீசும் மேற்கத்திய காற்றழுத்தத் தாழ்வு நிலை தெற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இது தென் இந்தியப் பகுதிகளில் வளிமண்டல நிலைத்தன்மையற்ற சூழலை உருவாக்கியுள்ளது. எனவே குமரிக்கடல் முதல் தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், வங்கக்கடலில் இருந்து வீசும் ஈரப்பதம் மிக்க காற்றும், நிலப்பரப்பில் இருந்து வீசும் காற்றும் சந்திக்கும் இடமாக தமிழகத்தின் உட்புற மாவட்டங்கள் இருக்கின்றன.

வழக்கமாக மார்ச் மாதத்தில் சூரிய கதிர்கள் நேரடியாக நிலத்தைத் தாக்கும். ஆனால், தற்போது நிலவும் மேகமூட்டம் சூரிய வெப்பம் நிலத்தை அடையாமல் தடுக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல இடங்களில் பரவலான மழை பெய்துள்ளது. மழையினால் தரைப்பகுதி குளிர்ந்துள்ளதால், வெப்பம் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை எனவே தான் வெப்பநிலை 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை குறைவாக இருக்கக்கூடும். கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே பெய்துள்ள இந்த 'ப்ரீ-மான்சூன்' மழையும், வளிமண்டல சுழற்சியும்தான் இந்த வெப்பநிலை குறைவுக்குக் காரணம் ஆகும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "மன்னார் வளைகுடா முதல் தென் கர்நாடகத்தின் உள்பகுதி வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 20-ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 21, 22-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23, 24-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இன்று முதல் மார்ச் 22-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை குறைவாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளத்தில் 9 செ.மீ, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் 8 செ.மீ, மழை பதிவாகியுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications