இன்னைக்கு நைட் குளு குளு கிளைமேட் தான்.. தமிழகம் முழுக்க 30 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்
சென்னை: தமிழகம் முழுக்க இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. சூரியனே வெளியில் தெரியாத அளவுக்கு தமிழகம் முழுக்க ஜில் கிளைமேட் நிலவியது. இந்த குளுகுளு ஜில் கிளைமேட் இன்று இரவு வரை நீடிக்கும் என்பது போல, தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை உள்பட 30 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் இன்று அதிகாலையில் இருந்தே பல்வேறு இடங்களில் மழை கொட்ட ஆரம்பித்தது. அதிகாலையிலேயே நெல்லை, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. இன்று நாள் முழுக்க வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க தொடங்கியது.

கோவையில் மூழ்கிய சுரங்கப்பாதை
குறிப்பாக கோவை மாவட்டத்தில் மாலை 4 மணியளவில் ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. ஒரு மணி நேரமாக விடாமல் கொட்டிய கனமழையால் ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் பம்ப் கொண்டு மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் சுமார் 7 செமீ மழை பெய்தது. மதுரையிலும் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக அண்ணா நகர், கேகே நகர், தெப்பக்குளம், கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. தென்காசி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
30 மாவட்டங்களில் மழை
இவ்வாறாக இன்று பகல் முழுக்க பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோடை வெயில் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த நிலையில் இன்று இரவும் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதாவது தமிழக முழுக்க 30 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:- "திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தென்காசி மற்றும் தேனி ஆகிய 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை, விழுப்புரம்
இதேபோன்று சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், நாகை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி ஆகிய 21 மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது." என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோன்று கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு பகுதி
வரும் 22 ஆம் தேதி வாக்கில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகரக்கூடும். தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர்,வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (மே.19ம் தேதி) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
24 ஆம் தேதி வரை
மே.20ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கரூர், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மே.21 முதல் 24 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் 2 நாட்கள் எப்படி?
சென்னையில் இன்று (18-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (19-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications