களமிறங்கிய கடற்படை ஹெலிகாப்டர்.. படகு போக முடியாத இடங்களிலிருந்து மக்கள் பத்திரமாக மீட்பு!
திருநெல்வேலி: தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், ஏராளமான கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கின்றன. எனவே மக்களை மீட்க இந்திய கடற்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருகிறது.
வழக்கம் போல நேற்று அதிகாலை மழை தொடங்கியது. கொஞ்ச நேரத்தில் விட்டுவிடும் என்று பலரும் நம்பிக்கொண்டிருந்த நிலையில், நேரம் ஆக ஆக மழையின் அளவு தீவிரமடைந்தது. நேற்றிரவு மழை தனது முழு பலத்தை காட்டியது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி என 4 மாவட்டங்களிலும் மழை தீவிரமடைந்தது. நீர் நிலைகள் வேகமாக நிரம்பின. ஒரு கட்டத்தில் உபரி நீர் ஊருக்குள் புகுந்தது. பல இடங்களில் ஏரி, குளத்தில் உடைப்பு ஏற்பட்டு அந்த நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது.

தூத்துக்குடியில் கடந்த 24 மணி நேரத்தில், காயல்பட்டினத்தில் 93.2 செமீ மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 61.8 செமீ மழையும், திருச்செந்தூரில் 67.9 செமீ மழை பதிவாகியுள்ளது. இதே திருநெல்வேலியை பொறுத்த அளவில் மூலக்கரைப்பட்டி - 61 செ.மீ, நாங்குநேரி - 33 செ.மீ, மாஞ்சோலை - 55, ஊத்து - 50, நாலுமுக்கு - 47 செ.மீ, பாளையங்கோட்டை - 44 செ.மீ, அம்பாசமுத்திரம் - 43செ.மீ, சேரன்மகாதேவி - 41 செ.மீ, கன்னட அணைக்கட்டு - 41 செ.மீ, காக்காச்சி - 36 செ.மீ, நம்பியார் அணை - 36 செ.மீ, பாபநாசம் - 35 செ.மீ, மணிமுத்தாறு - 33 செ.மீ, களக்காடு - 32 செ.மீ, திருநெல்வேலி - 31 செ.மீ, கொடுமுடியாறு அணை - 30 செ.மீ, சேர்வலர் அணை - 27 செ.மீ, ராதாபுரம் - 27 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
#WATCH | Indian Navy ground and aerial rescue teams augmenting the flood relief operations by the local administration in Tamil Nadu.
— ANI (@ANI) December 18, 2023
Rescue operations undertaken by Flood Relief Teams and by Indian Navy helicopter deployed from local units. So far 42 personnel have been… pic.twitter.com/8R0naFblMb
கடந்த 40 ஆண்டுகளில் இப்படி ஒரு மழையை நாங்கள் பார்த்ததில்லை என இம்மாவட்ட மக்கள் கூறுகின்றனர். பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் ஆகியவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. உயிர் பயத்தில் மக்கள் வீடுகளின் மொட்டை மாடியில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு உணவு கொண்டு சேர்க்க முடியாமல் மீட்பு படையினர் தவித்து வருகின்றனர். சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்திலிருந்து தென் மாவட்டங்களின் சில பகுதிகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கின்றன.
நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் படகு மூலம் சென்று மக்களை மீட்கும் முயற்சி சாத்தியமில்லாததாக மாறியுள்ளது. தற்போது வரை 8 பேரிடர் குழுக்கள் மீட்பு பணியில் களமிறக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் படகு மூலம் மீட்க முடியாத இடங்களில் வசிப்பவர்களை கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு வருகின்றனர். மொட்டை மாடியில் தஞ்சமடைந்திருப்பவர்களை மீட்க ஹெலிகாப்டரிலிருந்து தொட்டில் கீழே இறக்கப்படுகிறது. அதன் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். தற்போதுவரை 2 கர்ப்பிணிகள் உட்பட 17 பேரை ஹெலிகாப்டர் பத்திரமாக மீட்டிருக்கிறது.
அதேபோல படகு போகமுடியாத இடங்களில், பாதுகாப்பாக தஞ்சமடைந்துள்ளவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. வெள்ளம் முழுமையாக வடிய இரண்டு நாட்கள் வரை ஆகும் என்பதால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications