கடல் எது கோவில் வளாகம் எது.. தெரியாத அளவுக்கு வெள்ளத்தால் இணைந்த திருச்செந்தூர் முருகன் கோவில்!
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டத்தில் விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் திருச்செந்தூர் முருகன் கோவிலை பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்கள் வலம் வரும் வீதி எங்கும் இடுப்பு அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. கடலோடு இணைந்துள்ளது திருச்செந்தூர் முருகன் ஆலயம்.
திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 69 செமீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடாது பெய்து வரும் கனமழையால் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குலசேகரன்பட்டினம், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, கல்லாமொழி, ஆலந்தலை, பரமன்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது. இதில் காயல்பட்டினத்தில் 95 செமீ மழையும் திருச்செந்தூரில் 69 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
திருச்செந்தூர் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கோவிலுக்குள் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. கடலும் கோவிலும் ஒன்றாக காட்சி அளிக்கிறது. கோவிலை சுற்றி மக்கள் வலம் வரும் தேரோடும் வீதி எங்கும் தண்ணீர் மயமாக காட்சி அளிக்கிறது.
கோவிலை சுற்றி கட்டப்பட்டு சுற்றுச்சுவரையும் தாண்டி வெள்ள நீர் கரைபுரண்டு ஓடி கடலில் கலந்து வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
Tiruchendur Murugan temple #Thoothukudi pic.twitter.com/fntdegoI2R
— Vinodh Arulappan (@VinodhArulappan) December 18, 2023
இதனால் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கோவிலுக்கு யாரும் இப்போதைக்கு வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நாழிக்கிணறு பகுதியிலும் பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமி தாக்கிய போது திருச்செந்தூர் கடல் உள் வாங்கியது. கோவிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. சுனாமியில் இருந்து காத்த சுப்ரமணியர் தற்போது மழை வெள்ளத்தில் இருந்து காக்க வேண்டும் என்று பக்தர்கள் கண்ணீர் மல்க வேண்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications