தாங்க முடியாத மழை.. சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு! மாணவர்கள் வரவேண்டாம் என அறிவிப்பு
சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ காலம் காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. இதில் கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டில் மழை பொழிவு மேலும் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செவ்வாய் மாலை தொடங்கிய கனமழை இன்று வரை விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது.

நேற்று மீனம்பாக்கம், ஆவடி, அடையாறு, அம்பத்தூர், கொளத்தூர், பூந்தமல்லி, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், பூண்டி, அடையாறு, கோட்டூர்புரம், ராயபுரம், கிண்டி, தரமணி, சாந்தோம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. தொடர் கனமழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இன்றும் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்து உத்தரவிட்டு உள்ளார். அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து இருக்கிறார் அம்மாவட்ட ஆட்சியர். திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில்தான் சென்னையில் பெய்து வரும் கனமழை மற்றும் தேங்கி இருக்கும் மழை நீரின் காரணமாக இன்று சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில்,
"நவம்பர் 30ஆம் தேதி நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்படுகின்றன.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் எந்த தேதியில் நடைபெறும் என்பது பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். இன்றைய தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ள காரணத்தால் தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications