வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்று முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்றிரவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு கேரளப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அக்டோபர் 10 (இன்று) முதல் அக்டோபர் 15 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் ஒருசில மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அக்டோபர் 10ஆம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் அக்டோபர் 11ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களை பொறுத்தவரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடலில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications