காலையிலேயே தொடங்கிய கனமழை.. சென்னை, செங்கல்பட்டு உட்பட 10 மாவட்டங்களில் மழை.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகளும் நிரம்பி உள்ள நிலையில், பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தது முதலே தொடர்ச்சியாக நல்ல மழை பெய்து வருவதால் நீர் நிலைகளிலும் இருப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கோடைக் காலத்தில் நிச்சயம் பிரச்சினை இருக்காது என்று கூறப்படுகிறது.
அடுத்த 3 மணி நேரம் மழை: இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த 10 மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை காரணமாக சில இடங்களில் நீர் தேங்கி நிற்கும் என்றும் இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படக் கூடும் என்பதால் பொதுமக்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம்: முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தினசரி செய்திக் குறிப்பில், உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரளப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக் கூடும்.
இதன் காரணமாக இன்று (நவ. 24) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
எங்கெல்லாம் மழை இருக்கும்: அதேபோல நாளை (நவ. 25) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது, அடுத்து வரும் நாட்களிலும் மழை இருக்கும் என்றே வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications