ஊட்டியில் கொட்டும் மழை.. உருண்டு விழுந்த பாறைகள்.. மலை ரயில் சேவை ரத்து
நீலகிரி: தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் மழை பெய்து வரும் நிலையில், குன்னூர் - உதகை இடையே மலை ரயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. இதனால், சீரமைப்புப் பணிகளுக்காக தற்காலிகமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா என்றாலே பலரின் டாப் டென் லிஸ்டில் முதலில் இடம்பிடிப்பது மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியாகத்தான் இருக்கும். நீலகிரிக்கு ஆண்டு முழுவதுமே சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். சர்வதேச சுற்றுலாத் தலமாக உள்ள நீலகிரி மாவட்டத்துக்கு, தினசரி பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் கூட சுற்றுலாவுக்காக வந்து செல்கின்றனர். முக்கியமாக ஏப்ரல், மே உள்ளிட்ட சீசன் காலகட்டங்களில் சமவெளிப் பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிப்பதற்காகவும், கோடை விடுமுறையை கழிப்பதற்காகவும் நீலகிரியில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
நீலகிரியின் மற்றொரு சிறப்பு மலை ரயில் சேவை. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி மூலமாகவும், குன்னூர் முதல் உதகை வரை டீசல் மூலமாகவும் இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பல்வேறு வளைவுகள், பாலங்களைக் கடந்து செல்லும் இந்த ரயில் அடர்ந்த வனப் பகுதிளுக்குள்ளும் மலைகள், அருவிகள் என அனைத்தையும் கடந்து செல்லும். இதனால், உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் இடையே இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், உதகை வரை நீலகிரி மலை ரயில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பகல் 12.30 மணிக்கு உதகையைச் சென்றடையும். இந்த மலை ரயிலில் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளைச் சேர்ந்த பயணிகளும் அதிக அளவில் பயணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக நீலகிரி சுற்றுவட்டாரம் முழுவதும் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது.
நீலகிரியில் பெய்து வரும் மழை மற்றும் மண் சரிவு காரணமாக ரயில் தண்டவாளத்தில் மண், பாறைகள், மரங்கள் ஆகியவை ஆங்காங்கே விழுந்துள்ளன. இதனால், மலை ரயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இததையடுத்து, அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையம் - குன்னூர் வரை இயக்கப்படும் மலை ரயில் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், குன்னூர் - உதகை இடையே மலை ரயில் வழக்கம்போல இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக மூன்று இடங்களில் மலை ரயில் செல்லும் வழித்தடத்தில் பாறைகள் மற்றும் மண் விழுந்திருந்தது.
இதையடுத்து, குன்னூரில் இருந்து உதகை செல்லும் மலை ரயில் ரத்து செய்யப்பட்டு, குன்னூர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மிகவும் சோகமடைந்தனர். ரயில் தடத்தில் விழுந்துள்ள மரங்கள், மண், பாறைகளை அகற்றும் பணயில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் நிறைவடைந்த பின்னர் வழக்கம்போல மலை ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications