உடனே வீட்டை காலி பண்ணிட்டு ஓடுங்க என்று வெளியான.. தூத்துக்குடி கலெக்டர் அபய குரல் நேற்றைய ஆடியோ
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பல ஊர்களைச் சேர்ந்த தாமிரபரணி கரையோரத்தில் உள்ள மக்களை உடனடியாக வெளியேற்றுமாறு கிராம நிர்வாக அலுவலரிடம் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேற்று தெரிவித்துள்ளார். மேலும் வராதவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து வருமாறும் அவர் உத்தரவிட்டிருந்தார்.
தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. இதில் 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பாயும் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நீரோடைகள், கன்மாய்கள் மூலம் தண்ணீர் வெளியேறுவதால் சாலைகளில் சர்வ சாதாரணமாக இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் பல இடங்களில் கழுத்தளவு தண்ணீர் கூட தேங்கியுள்ளது.
இதையடுத்து தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு நேற்று அதிகரித்தது. முதலில் 10 ஆயிரம் கனஅடி நீரை வெளியேற்றினார்கள். பிறகு 20 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து 50 ஆயிரம் கனஅடி நீர் தற்போது வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் அதிக கனமழை பெய்யும் என்பதாலும் தாமிரபரணிக்கு 1 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்ததாலும் பாதுகாப்பு கருதி ஒரு லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பேசிய ஆடியோ வைரலாகி அங்கு எத்தனை ஆபத்தான சூழல் நிறைந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. அந்த ஆடியோவில் விஏஓவிடம் ஆட்சியர் லட்சுமிபதி உரையாடல்:
ஆட்சியர்: ஸ்ரீவைகுண்டம் தாலுக்காவில் தாமிரபரணி ஆற்றின் அருகே எத்தனை கிராமங்கள் உள்ளன என கேட்கிறார்.
விஏஓ: 15 கிராமங்கள் உள்ளன
ஆட்சியர்: எல்லாம் எத்தனை கி.மீ தூரத்தில் இருக்கும் ?
விஏஓ: சார் 2 அல்லது 3 கி.மீ,
ஆட்சியர்: வேற வழியே இல்லைங்க. எல்லாரும் வெளியே வந்தாகணும். இதுவரை தாமிரபரணியிலிருந்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றியிருப்பார்கள். இனி 1 லட்சத்திற்கு மேல் தண்ணீர் வர போகிறது. கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள். நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. யாராவது வரமறுத்தால் அதையெல்லாம் கேட்காதீங்க.
வலுக்கட்டாயமாக இழுத்து வந்துடுங்க. வண்டி வைத்து கூட்டிட்டு வாங்க, அதன் பிறகு தங்குமிடம், உணவு குறித்து யோசிக்கலாம். இப்போது ஒரு நொடி கூட தாமதிக்கக் கூடாது. வீட்டை பூட்டிவிட்டு வெளியே வந்துவிடச் சொல்லுங்கள்.

மீட்பு படையினரிடமும் நான் வலுக்கட்டாயமாக அழைத்து வர சொல்லி சொல்லியிருக்கேன். நம்மோடு முதல் இலக்கு உயிரை காப்பாற்றுதல்தான். நிலைமை மிகவும் ஆபத்தான வகையில் இருக்கிறது. இதற்கு மேல் என்னால் எப்படி சொல்ல முடியும் என தெரியவில்லை.
விஏஓ- ஓகே சார்
ஆட்சியர்: பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர்களிடம் உடனே பேசுங்கள். 2 கி.மீ. தூரத்தை தாண்டிக் கூட வெள்ளம் வரும். 1 லட்சம் கன அடி தண்ணீர் வர போகிறது. நமக்கு அதிகபட்சமாக 4 மணி நேரம் டைம் இருக்கிறது. ஊருக்குள் 100 சதவீதம் தண்ணீர் வர போகிறது என சொல்லிவிடுங்கள். மழையினால் தண்ணீர் வரவில்லை, அணையிலிருந்து திறக்கும் தண்ணீர்தான் வர போகிறது என சொல்லிவிடுங்கள். உடனே செயல்படுங்கள், நேரம் இல்லை என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதனிடையே இந்த ஆடியோ நேற்றையது என்றும், இன்று தாமிரபரணியிலிருந்து திறக்கப்படும் நீர் அளவு குறைந்துவிட்டதாகவும், தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications