இன்னும் விடவே இல்ல.. விழுப்புரத்தில் வரலாறு காணாத மழை பெய்கிறது! நேரில் ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின்
விழுப்புரம்: விழுப்புரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்னும் மழை நிற்கவில்லை. நானும் மூத்த அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகிறோம். தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாதது போல மழை வரலாறு காணாத மழை மாதிரி பெய்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த பின்னரும் வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுவையில் கனமழை கொட்டி தீர்த்தது. புதுவையில் 48 செமீ மழை பதிவாகியது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.

விழுப்புரத்தில் பல்வேறு இடங்களில் மழை நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. தொடர்ந்து அரசு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் விழுப்புரத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது விழுப்புரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்னும் மழை நிற்கவில்லை. நானும் மூத்த அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகிறோம். தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கண்டிப்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்கப்படும் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உதயநிதி ஸ்டாலின் கூறினார். உதயநிதி கூறியதாவது:-
விழுப்புரத்தில் மழை இன்னும் விடவே இல்ல.. மழை சுத்தமாக விடவே இல்லை. இப்போது கூட பெய்துகொண்டே தான் இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாதது போல மழை வரலாறு காணாத மழை மாதிரி பெய்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, நானும் மூத்த அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகிறோம். பொன்முடி, சிவசங்கர், செந்தில் பாலாஜி, மாநகராட்சி ஆணையர்கள் வந்து இருக்கிறோம்.
இங்குள்ள பேருந்து நிலையமானது சின்ன மழைக்கே தண்ணீர் தேங்கும். ஆனால் இப்போ மிகப்பெரிய மழை பெய்திருக்கும். சுமார் 60 செமீ மழை பெய்து இருக்கும். இன்னும் பெய்து கொண்டே தான் இருக்கிறது. தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் பம்பு மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை பெய்வது நின்றால் தான் முழுமையாக தண்ணீரை வெளியேற்ற முடியும். இந்த பேருந்து நிலையத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து நாங்கள் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி கடலூர் மாவட்டத்திற்கு ஆய்வு செய்ய போகிறோம். மழையால் பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் சேதமடைந்ததால் கவலையில் உள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். மழை நின்ற பிறகு 3 நாட்கள் கழித்து கள ஆய்வு செய்து நிவாரணம் வழங்கப்படும். கண்டிப்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications