நீண்ட க்யூவில் நின்று வாகனங்களில் பால் வாங்கும் சென்னை மக்கள்! வாட்டர் பாட்டிலுக்கும் தட்டுப்பாடு!
சென்னை: மிக்ஜாம் புயலில் இருந்து சென்னை மெல்ல மீண்டு வரும் நிலையில், அத்தியாவசிய பொருளான பால் வாங்கவே பொதுமக்கள் சாலைகளில் மிக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் வங்கக் கடலில் நேற்று முன்தினம் ஏற்பட்டது. இந்தப் புயல் நேற்று சென்னை அருகே வந்த போது இது தீவிர புயலாக வலுப்பெற்றது. இதன் காரணமாக நேற்று சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்தது.

நேற்று முன்தினம் இரவு தொடங்கிய இந்த கனமழை மழை நேற்று இன்று காலை வரையிலும் கூட பல இடங்களிலும் பெய்தது. இதனால் நகரில் எல்லா இடங்களிலும் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது.
மிக்ஜாம் புயல்: குறிப்பாக நேற்று கடல் கொந்தளிப்பாக இருந்த நிலையில், வெள்ள நீரையும் கடல் உள்வாங்கவில்லை. இதனால் பல பகுதிகளில் நீர் தேங்கியது. மழை தொடர்ந்து பெய்த நிலையில், கடலும் நீரை உள்வாங்காத நிலையில், எல்லா இடங்களிலும் மழை நீர் தேங்கியது. தொடர்ந்து மழை பெய்ததால் தேங்கிய மழை நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்தது. இன்று காலை தான் மழை மெல்ல விட்டது.
இப்போது நகரின் முக்கிய சாலைகளில் மட்டும் நீர் வடிந்துள்ளது. உட்புற சாலைகளில் நீர் தேங்கியுள்ள நிலையில், அதை சரி செய்யவும் தீவி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் மழை நீர் அதிகம் தேங்கியுள்ளதாக கூற்பபடுகிறது. இருப்பினும், இன்றிரவுக்குள் பல இடங்களில் மழைநீர் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பால் தட்டுப்பாடு: எல்லா பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் இன்று சென்னையில் பால் சேவை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பால் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இன்று காலை பல இடங்களில் ஆவின் பால் கிடைக்கவில்லை. சில இடங்களில் மட்டுமே தனியார் பால் கிடைத்தன. அதுவும் அதிக விலைக்கு விற்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இப்போது நிலைமை மேலும் மேம்பட்டுள்ள நிலையில், பலரும் வெளியே வர தொடங்கியுள்ளனர். முதலில் அனைவரும் அத்தியாவசிய பொருளான பாலை வாங்கவே கடைகளுக்கு சென்றுள்ளனர். இருப்பினும், பால் சப்ளை பற்றாக்குறையாகவே இருக்கிறது. இதன் காரணமாக அசோக் நகர் பகுதிகளில் பால் வாங்க மக்கள் மிக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய ஒரு சூழலும் ஏற்பட்டுள்ளது.
பால் விநியோகம் எப்படி: பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் கடைகள் மூலமாக பால் விற்பனையை மேற்கொள்ளாமல் நேரடியாக பொதுமக்களுக்கு பால் விநியோகம் செய்கிறார்கள். மேலும், பால் தட்டுப்பாடு காரணமாக கடைகளில் டீ, காபி கூட பால் இல்லாமல் தான் விற்பனை செய்யப்படுகிறது.

வாட்டர் பாட்டிலுக்கும் சிக்கல்: அதேபோல குடிநீர் பாட்டில்சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் எல்லா இடங்களிலும் நீர் தேங்கியுள்ள போதிலும், அதில் கழிவுநீர், குப்பை கலந்துள்ளதால் அவற்றை குடிக்க முடியாது. வீட்டில் குடிநீர் இல்லாததால் வாட்டர் பாட்டில், தண்ணீர் கேன் வாங்க பொதுமக்கள் செல்லும் நிலையில், அதற்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.
முன்னதாக இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கமளித்திருந்தார், அதாவது சென்னை அருகே இருக்கும் பால் பண்ணைகளில் நீர் சூழ்ந்துள்ளதால் தான் பால் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவி அது சரி செய்யப்படும் என கூறியிருந்தார்.
இப்போது தான் தண்ணீர் வடிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் நாளை தான் அனைத்து சேவைகளும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று கூறப்படுகிறது












Click it and Unblock the Notifications