Montha: மொந்தா புயலின் கண் எங்கே இருக்கும்? சென்னைக்கு அருகில் வருதா? வங்கக்கடல் சம்பவம் பாருங்க!
சென்னை: சென்னைக்கு சுமார் 800 கிலோ மீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக வலுப்பெற்று வருகிறது . இன்று ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவடைந்து இது மொந்தா புயலாகும் மாறும்.. அதன் கண் பெரும்பாலும் சென்னையில் இருந்து 700 கிமீ தூரத்தில் கிழக்கு தென்கிழக்கு திசையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தமிழ்நாட்டிற்கும் ஒடிசாவிற்கும் புயல் எச்சரிக்கை விடுத்து, இரு மாநிலங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கையை அறிவித்துள்ளது. வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், திங்களன்று புயலாக வலுப்பெற்று ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொந்தா புயல் என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டு உள்ளது. மொந்தா புயலின் கண் எந்த பாதையில் செல்லும் என்பது தொடர்பான கணிப்புகள் வெளியாகி உள்ளன.

மொந்தா புயல்- தமிழ்நாட்டில் இன்று மழை
மொந்தா புயல் காரணமாக இன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
எங்கே இருக்கிறது மொந்தா புயல்?
இன்று காலை 5:30 மணி நிலவரப்படி, போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 420 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினம், சென்னை, காக்கிநாடா மற்றும் கோபால்பூர் போன்ற முக்கிய கடலோர நகரங்களில் இருந்து 800 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது.
கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் மிதமான மழையுடன் இடியுடன் கூடிய மின்னல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேவேளையில், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு லேசான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவின் கஞ்சம், கஜபதி மற்றும் ராயகடா மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இங்கு மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புயல் ஒடிசாவில் நேரடியாக கரையைக் கடக்க வாய்ப்பில்லை என்றாலும், பலத்த மழையும் பலத்த காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொந்தா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்?
மல்காங்கிரி, கோராபுட், நவரங்க்பூர், கலாஹண்டி, கந்தமால், பலங்கீர், நுவாபடா, பவுத், நாயகர், குர்தா, பூரி, ஜகத்சிங்பூர், கேந்திரபடா மற்றும் கட்டாக் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை தொடர்கிறது.
பாலசோர், பத்ரக், ஜாஜ்பூர், சுந்தர்கர், ஜார்சுகுடா, பர்கர், சம்பல்பூர், தியோகர், அங்குல், டெங்கனால், கியோன்ஜார், மயூர்பஞ்ச் மற்றும் சோனேபூர் மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மின்னலுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புயலின் பாதை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்ட தகவல்களை வெளியிடவில்லை என்றாலும், ஆந்திரப் பிரதேசத்தில் கரையைக் கடக்கவே அதிக வாய்ப்புள்ளது. அக்டோபர் 27 ஆம் தேதி காலைக்குள் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் புயலாக இது வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதியை நோக்கி இது நகரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மொந்தா புயல் பாதுகாப்பு
பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசு மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அக்டோபர் 26 முதல் ஒடிசா கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் வீடுகளிலேயே இருக்குமாறும், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், வானிலையைக் கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அக்டோபர் 28, செவ்வாய்கிழமை அன்று, கேந்திரபடா, ஜகத்சிங்பூர், கட்டாக், பூரி, குர்தா, கோராபுட் மற்றும் மல்காங்கிரி ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications