செப்டம்பரில் அசால்ட் செய்யும் வெயில்! காரணம் இதுதான்.. மத்திய அரசு விஞ்ஞானி விளக்கம்!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பருவமழை குறைந்துள்ள நிலையில், வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இப்படி இருக்கையில், மறுபுறம் வெயில் கொளுத்தி வருகிறது. இதற்கான காரணம் குறித்து மத்திய அரசு விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.
வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழையானது நாட்டின் 70% நிலப்பரப்புக்கு தேவையான மழையை கொடுக்கும். இது செப்டம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரும். இருப்பினும், செப்டம்பரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்காது. காரணம் மேகங்களின் திரள்தான். ஆனால், இந்த முறை தமிழ்நாட்டில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இன்று மட்டும் 11 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரான்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.

இப்படி இருக்கையில் இந்த அதீத வெயிலுக்கான காரணம் குறித்து விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். இது குறித்து ஒன்இந்தியா தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், "செப்டம்பரில் தமிழ்நாட்டில் மழை இருக்காது. ஆனால் வங்கக்கடலிலிருந்து மேகங்கள் உருவாகி, அது தமிழ்நாட்டின் மீது நிலை காண்டிருக்கும். இந்த மேகங்கள் சூரிய ஒளியை பிரதிபலித்து வெப்பத்திலிருந்து பூமியை காக்கும். ஆனால் இந்த முறை இப்படி மேகங்கள் அதிக அளவில் உருவாகவில்லை. வட மாநிலங்களிலும் வறண்ட காலநிலை நிலவி வருகிறது. எனவே, வெப்பம் அதிகரித்திருக்கிறது.
இரண்டாவது காரணம் சூரியன். அதாவது சூரியன் மிகச்சரியாக கிழக்கில் உதிக்காது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதாவது, சூரியன் வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு நோக்கியும், தென்கிழக்கிலிருந்து வடகிழக்கு நோக்கியும் நகரும். இதனால் சூரிய உதயம் மிகச்சரியாக கிழக்கில் அமையாது. அதிகபட்ச வடகிழக்கில் சூரியன் உதித்தால் அதை 'கடக சங்கராந்தி' என்று கூறுவார்கள். இதுவே அதிகபட்ச தென்கிழக்கு எனில் 'மகர சங்கராந்தி' என்று கூறுவார்கள்.
இப்போது சூரியன் வடகிழக்கிலிருந்து தென் கிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த இடத்தில்தான் தமிழ்நாடு இருக்கிறது. அதாவது தமிழ்நாட்டின் தலைக்கு மேலே சூரியன் இருக்கிறது. இதுவும், போதுமான மேகங்கள் இல்லாததும் சேர்ந்து அதிகபட்ச வெப்பநிலையை உருவாக்கியுள்ளன.
மேற்குறிப்பிட்ட இரண்டு சங்கராந்திக்கு நடுவில் உள்ள பகுதியை, 'இலையுதிற் சம இரவு புள்ளி' என்றும் 'இளவேனிற் சம இரவு புள்ளி' என்றும் குறிப்பிடுகிறார்கள். இதில் 'இளவேனிற் சம இரவு புள்ளி' செப்டம்பர் மாதத்தில்தான் வருகிறது. இந்த மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் நிழல் இல்லா நாளாக இருக்கும். அப்படியெனில் சூரிய கதிர்கள் செங்குத்தாக நிலப்பரப்பின் மீது விழுகின்றன. இதனால்தான் வெயில் அதிகமாக இருக்கிறது.
செப்டம்பரில் வெயில் அதிகமாக இருப்பது, இப்போது நடப்பது கிடையாது. கடந்த பல ஆண்டுகளாகவே இந்த மாதத்தில் வெயில் அதிகமாக பதிவாகியுள்ளது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications