நடுக்கடலில் நடந்த 3 சம்பவங்கள்.. மொத்தமாக எல்லாம் மாறுதே.. சென்னைக்கு அருகே.. ஆட்டம் காட்டும் டிட்வா
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் தாழ்வு மையம் கண்டிப்பாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னைக்கு அருகிலேயே இருக்க போவதாக சென்னை வானிலை மைய ஆய்வு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
டிட்வா புயல் வலிமை இழந்து ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. ஆனால் இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகராமல் தமிழகக் கடலோரத்தில் அசையாமல் நிற்கிறது. முக்கியமாக வங்கக்கடலில் சென்னைக்கு அருகே நிற்பதால் இந்த தாழ்வு மண்டலம் கடுமையான மழையை கொடுக்கிறது.

சென்னை மற்றும் அதன் கரையோரப் பகுதிகளில் கனமழை விடாமல் பெய்து வருகிறது. இந்த தாழ்வு மண்டல அமைப்பின் மெதுவான நகர்வால், வலுவான மழை மேகங்கள் மீண்டும் மீண்டும் நகரை நோக்கி வருகிறது, இதுவே அதிகாலை முதல் தொடர் மழையைக் கொண்டுவந்ததாக வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது தாழ்வு மண்டலம் அருகிலேயே இருந்தபடி .. மழை மேகங்கள் சென்னையை நோக்கி நகர்த்தி வருகிறது.
வங்கக்கடலில் 3 சம்பவங்கள்
தற்போது வங்கக்கடலில் 3 முக்கியமான சம்பவங்கள் நடந்து உள்ளன. இந்த சம்பவங்கள்தான் கடுமையான மழையை சென்னையை நோக்கி கொண்டு வருகிறது.
1. இந்த புயல் வலிமை இழந்துவிட்ட பின்பும் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டு உள்ளது. அடுத்த 24 - 30 மணி நேரத்திற்கு தொடர்ந்து இப்படியே சென்னைக்கு அருகிலேயே அது இருக்கும். இதுதான் மழை பெய்ய முதல் காரணம்.
2. பொதுவாக ஒரு தாழ்வு மண்டலம் வலிமை இழக்காமல் இருக்க, கடல் மேல் இருக்கும் வெப்பநிலை 20 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். தற்போது அந்த சூழல் சரியாக இருந்ததால் இந்த தாழ்வு மண்டலம் வலிமை இழக்காமல் சென்னைக்கு அருகிலேயே அப்படியே இருக்கிறது. ஆனால் இன்று இரவு இது வலிமை இழக்கலாம்.
3. இந்த தாழ்வு மண்டலத்தின் உயரம் முக்கியம். இது சரியாக சென்னையின் வான் பகுதிக்கு அருகிலேயே .. வங்கக்கடல் மேலே இருக்கிறது. அதீத உயரத்தில் இருந்திருந்தால் மேகத்தை இழுத்திருக்காது, மழை பெய்யாது. ஆனால் இதன் உயரம் சரியாக இருப்பதால் மழை மேகங்கள் கூடி அதிக மழையை கொடுக்கிறது.
மழை விவரம்
நேற்று இரவு சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு மழை பெய்தது. அதிகாலையில் 1-2 மணி நேரம் விடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது.
இப்போது காலை 9 மணியில் இருந்து மீண்டும் விடாமல் மழை பெய்து வருகிறது. இன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
நாளையும் சென்னையில் மழை தொடரும். அதேபோல் நாளை தமிழ்நாடு. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications