அரபிக்கடல் புயலை விடுங்க.. இங்கே வங்கக்கடலில் உருவாகும் பிரம்மாண்ட புயல்! தமிழ்நாட்டை தாக்குமா?
சென்னை: வங்கக்கடலில் அடுத்த 18 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயல் தமிழ்நாட்டை தாக்குமா என்று வானிலை வல்லுனர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த தேஜ் புயல் மிக தீவிர புயலாக வலுவடைந்து உள்ளது. இந்த புயலுக்கு சாதகமான சூழ்நிலை தற்போது தீவிரமாகிக்கொண்டு இருக்கிறது. தென்மேற்கு அரபிக் கடலில் தேஜ் புயல் மையம் கொண்டிருக்கிறது. அரபிக் கடல் தேஜ்புயல் நேற்று அதிதீவிர புயலாக வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதேபோல் இந்த புயல் வலிமை அடைந்தது.
இதனால் ஆழ்க்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அக்டோபர் 26ம் தேதி வரை மீனவர்கள் வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 25ம் தேதி அதிகாலை ஓமன்-ஏமன் இடையே புயல் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடல் புயல்: இந்த நிலையில்தான் வங்கக்கடலில் அடுத்த 18 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலிமை அடைந்து வருகிறது.
புயலாக மாறி வரும் 25ம் தேதி வங்கதேசத்தின் கேபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்த புயல் தமிழ்நாட்டை தாக்குமா என்று வானிலை வல்லுனர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டை தாக்குமா: வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மீனவர்கள் தங்களது மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

இங்கே காற்று வேகம் அதிகமாக இருக்கும். ஆனால் நேரடியாக இந்த புயல் தாக்கத்தை ஏற்படுத்தாது. இந்த புயல் தமிழ்நாட்டிற்கு மழையை கொடுக்கும். வடகிழக்கு பருவமழையை கொடுக்கும். ஆனால் புயல் நேரடியாக தமிழ்நாட்டை தாக்காது. ஏனென்றால் புயல் எதிர் திசையில் செல்லும் வாய்ப்புகள் உள்ளன.
இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25.10.2023 சமதல் 27.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்றபடி புயல் நேரடியாக தமிழ்நாட்டை தாக்காது.

இன்னொரு பக்கம் அரபிக்கடலில் உருவாகி இருக்கும் தேஜ் புயல் தமிழ்நாட்டை தாக்காது. ஓமன், ஏமன் கடற்கரைகளுக்கு இடையே கரையை கடப்பதால், தமிழ்நாட்டை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அரபிக்கடலில் இருப்பதால் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூட மழை பெய்யாது. ஏனென்றால் புயல் எதிர் திசையில் செல்கிறது.












Click it and Unblock the Notifications