தப்பிய ராமநாதபுரம்.. தென் மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் இரவு 7 மணி வரை தென் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. இம்மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வடகிழக்கு மழை தொடங்கிவிட்டாலே, வங்கக்கடல் ஓரம் உள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். சில நேரங்களில் இயல்பை விட அதி கனமழையும் பெய்துவிடும். கடந்த இரண்டு நாட்களாக ராமநாதபுரத்தில் இதுதான் நடந்திருக்கிறது. நேற்று முன்தினம் பாம்பன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 44 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியிருந்தது. இது டபுள் ரெட் அலர்ட்டுக்கு சமமாகும். நேற்றும் ராமநாதபுரத்தில் 34 செ.மீ அளவுக்கு கனமழை பெய்திருக்கிறது.

ராமநாதபுரம் தவிர மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்திருக்கிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இடுப்பளவு நீரில் மூழ்கிய நெற்பயிர்களை விவசாயிகள் வேதனையுடன் எடுத்து காட்டுகிறார்கள். இப்படி இருக்கையில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இரவு 7 மணி வரை 4 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
நல்வாய்ப்பாக இந்த லிஸ்ட்டில் டெல்டா மாவட்டங்களோ, ராமநாதபுரம் மாவட்டமோ இடம் பெறவில்லை. மாறாக, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இம்மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.
மறுபுறம் வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது என்றும், இது நாளை காற்றழுத்த தாழ்வு மையமாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வாய்ப்பிருப்பின் இது புயலாகவும் வலுப்பெறக்கூடும் என்றும், அப்படி நடந்தால் சென்னையை ஒட்டிய பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் தனியார் வானிலை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக இன்று காலை வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "இன்று முதல் நவ.24ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ.25ம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக
கடலூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
திருவாரூர்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ.26ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக
கடலூர்
தஞ்சாவூர்
திருவாரூர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை
புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
விழுப்புரம்
ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நவ.27ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக விழுப்புரம்
கடலூர்
மயிலாடுதுறை
திருவாரூர்
நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும். அதேபோல
திருவள்ளூர்
ராணிப்பேட்டை
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
சென்னை
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
பெரம்பலூர்
அரியலூர்
தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications