டெல்டா மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்.. இரவு 7 மணி வரை உஷார்!
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், டெல்டா பகுதியில் 4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் என மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு இரண்டு பருவமழைகள் பரவலான மழைப்பொழிவை கொடுக்கும். ஜுலை மாதம் தொடங்கும் தென்மெற்கு பருவமழை, கோவை, திருப்பூர், ஈரோடு என கொங்கு மாவட்டங்கள் தொடங்கி தென்காசி, கன்னியாகுமரி வரை பரவலான மழையை கொடுக்கும். இந்த ஆண்டு இயல்பான அளவைவிட மழை சற்று அதிகமாக பெய்திருக்கிறது. இதனையடுத்து அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் மூலம் வட கடலோர மாவட்டங்கள் அதிக மழைப்பொழிவை பெற்று வருகின்றன.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் தொடங்கி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்திருக்கிறது. அக்.1 முதல் இன்றைய தேதி வரை மொத்தம் 317.4 மி.மீ வரை மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 326.9 செ.மீ அளவுக்கு பெய்திருக்கிறது. இது இயல்பை விட 3 சதவிகிதம் அதிகமாகும். அதிகபட்சமாக சென்னையில் 550.7 மி.மீ வரையும், குறைந்தபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 238.1 மி.மீ வரையும் மழை பதிவாகியுள்ளது.
இப்படி இருக்கையில் இரவு 7 மணி வரை 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.
முன்னதாக சென்னை வானிலை மையம் விடுத்திருந்த அறிக்கையில், "25-11-2024:கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், அரியலூர், சிவகங்கை புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
26-11-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
27-11-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications