தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை! மஞ்சள் அலர்ட் கொடுத்து.. பாலை வார்த்த வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது.
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில்தான் வெயில் அதிகரிக்கும். ஆனால், இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்த ஆண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மழை குறித்து மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வெயிலின் தீவிரம் குறையவில்லை.
நேற்று மட்டும் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 108.32 டிகிரி ஃபாரன்ஹீட் அளவும், அதற்கடுத்தபடியாக சேலத்தில் 107.42, திருப்பத்தூரில் 107.24 என வெயில் வாட்டி எடுத்திருக்கிறது. அதற்கடுத்தபடியாக கரூர் பரமத்தியில் 106.7, திருத்தணியில் 106.16, வேலூரில் 105.98, நாமக்கல்லில் 104, திருச்சியில் 103.46 என வெயில் பதிவாகியுள்ளது.
அதேபோல மே 1ம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். மே 2ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மே 3ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில், அதாவது இரவு 10 மணி வரை தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் கொடுத்திருக்கிறது. எனவே இந்த மாவட்ட மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications