சம மரியாதைக்காகப் போரிடும் கல்லறை வீரர்கள்! அ.குமரேசன்
சென்னையை நோக்கி பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் வருகிறவர்கள் நந்தம்பாக்கம் பகுதியில் இடது பக்கம் அந்தக் கல்லறை வளாகத்தைக் காணாமல் கடந்துவிட முடியாது. உள்ளே சென்று அநதக் கல்லறைகளை அருகில் நின்று பார்க்க வேண்டும், அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள பெயர்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை இதுவரையில் நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பு எனக்கு அமைந்ததில்லை. இனியேனும் அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு அந்த வளாகத்திற்குள் சென்றாக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் செய்தி ஒன்று வந்துள்ளது.
செய்திக்குள் போவதற்கு முன் அந்த வளாகம் பற்றிய சில தகவல்கள்: 2.75 ஏக்கர் பரப்பில் உள்ள அந்த வளாகத்தில் 856 கல்லறைகள் இருக்கின்றன. 1939ல் தொடங்கி 1945ல் முடிந்த இரண்டாம் உலகப்போரில், அன்றைய பிரிட்டிஷ் அரசின் ராணுவ வீரர்களாகப் பங்கேற்று போர்க்களத்தில் உயிர் நீத்த வீரர்களின் கல்லறைகள் அவை. அதற்கு முன், முதலாம் உலகப் போரில் (1914-1918) உயிரிழந்தோருக்கான நினைவுச் சின்னம் ஒன்றும் இந்த வளாகத்தில் இருக்கிறது. 'பேரரசு போர்க் கல்லறைகள் ஆணையம்' (இம்பீரியல் வார் கிரேவ்ஸ் கமிஷன்) என்று 1917ல் ஏற்படுத்தப்பட்டு பின்னர், பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பல நாடுகள் விடுதலையடைந்ததைத் தொடர்ந்து 1960ல் பெயர் மாற்றம் பெற்ற 'காமன்வெல்த் கல்லறைகள் ஆணையம்', இந்திய அரசுடன் இணைந்து இந்த வளாகத்தைப் பராமரித்து வருகிறது. ஆண்டுதோறும் இங்கே அந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடத்தப்படுகிறது.
தியாகத்தில் சமம், ஆனால்...
அந்த மரியாதை சம்பந்தமான செய்திதான் தற்போது வந்துள்ளது. காமன்வெல்த் போர்க் கல்லறைகள் ஆணையம் 150 நாடுகளில் சுமார் 17 லட்சம் கல்லறைகளை இது போன்ற வளாகங்களில் பராமரித்து வருகிறது. ஆணையத்தின் அறிவிக்கப்பட்ட கொள்கைகளில் ஒன்று, "அனைத்து வீரர்களுக்கும் ஒரே நாளில் சமமான மரியாதை செலுத்தப்பட வேண்டும். ஏனென்றால் அவர்கள் அனைவரின் தியாகமும் சமமானதுதான்," என்பதாகும். ஆனால், அவ்வாறு சம மரியாதை செலுத்தப்படவில்லை என்ற விமர்சனங்கள் இருந்து வந்தன. குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள கல்லறை வளாகங்களில், அந்தந்த நாடுகளின் இனங்களைச் சேர்ந்த (அதாவது வெள்ளையர் அல்லாத) ராணுவ வீரர்களின் கல்லறைகளுக்கு, வெள்ளையின வீரர்களின் கல்லறைகளுக்கு நிகரான மரியாதை செலுத்தப்படுவதில்லை என்று பல்வேறு தரப்பினரும் தாங்கள் கவனித்தவற்றிலிருந்து கூறி வந்திருக்கிறார்கள்.
2019ம் ஆண்டில், பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் லாமி தயாரித்த ஒரு தொலைக்காட்சி ஆவணப்படம், இந்த மரியாதைப் பாகுபாட்டை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது. இரண்டு உலகப்போர்களிலும் ஐரோப்பிய நாடுகளில் இறந்தோர் போல ஆப்பிரிக்க, ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளில் இறந்தவர்கள் நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை அந்த ஆவணப்படம் வலுப்படுத்தியது.

பல நாடுகளில் உள்ள வளாகங்களில் வெள்ளையர்களின் கல்லறைகள் பராமரிக்கப்படுவதிலிருந்து வீர வணக்கம் செலுத்தப்படுவது வரையில் தனி அக்கறையோடு இருக்கும். ஆனால் மற்ற இனங்களைச் சேர்ந்தவர்களின் கல்லறைகளில் இது எல்லாமே ஏனோதானோவென்று இருக்கும் அல்லது அந்தக் கல்லறைகள் கவனிப்பின்றி புறக்கணிக்கப்பட்டிருக்கும். வெள்ளையர்களின் கல்லறைகளில் அவர்களது பெயர் உள்ளிட்ட தகவல்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. மற்றவர்களின் கல்லறைகள் அவ்வாறு இல்லை. பல வளாகங்களில் அந்த மற்ற இனத்தவர்களுக்குத் தனித்தனி கல்லறைகள் கூட இல்லை. அவர்களுடைய பெயர்கள் மொத்தமாக ஒரு பெரிய கல்வெட்டில் மட்டுமே இருக்கும். இன்னும் சில இடங்களில், அப்படியான கல்வெட்டு கூட இல்லாமல் அலுவலக ஆவணத்தில் மட்டுமே இருக்கும்.
விமர்சனங்களால் வந்த விசாரணைக்குழு
குற்றச்சாட்டுகளைக் கூறியவர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் எதுவும் புனையப்படாமல், சுயேச்சையான விசாரணைக்கு ஆணையிடப்பட்டது. விசாரணைக் குழு பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தனது பணியை முடித்துத் தனது அறிக்கையை அளித்திருக்கிறது. அந்த அறிக்கை, குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்று உறுதிப்படுத்துகிறது. ஐரோப்பியர் அல்லாதவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுவதில்லை அல்லது ஒட்டுமொத்தமாக ஒரு "கூட்டு மரியாதை" மட்டுமே செலுத்தப்படுகிறது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. சுமார் 1,61,000 கல்லறைகள் இவ்வாறு உரிய மரியாதை செலுத்தப்படாமல் வைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 3,50,000 வரையில் உயரக்கூடும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அறிக்கையை வரவேற்றுள்ள டேவிட் லாமி, "நினைக்கப்படாதவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பை மன்னிப்புக் கேட்பதால் சரிப்படுத்திவிட முடியாது. ஆனால் ஒரு தேசம் என்ற முறையில், நமது வரலாற்றின் இந்த அருவருப்பான பாகத்தைக் கையாள்வதற்கும், நமக்காகத் தங்களின உயிரைத் தியாகம் செய்த ஒவ்வொரு வீரருக்கும் நமது மரியாதையைச் செலுத்தவும் நமக்கு இந்த மன்னிப்பு வாய்ப்பளிக்கும்," என்று கூறினார்.
மான்செஸ்டர் பல்கலைக்கழக பொது வரலாற்றுத்துறை பேராசிரியர் டேவிட் ஒலுசோகா, "முதலாம் உலகப்போர் பிரிட்டிஷ் கலாச்சாரத்தை ஓரளவுக்கு மாற்றியது. ஏனென்றால் இறந்தவர்கள் ஆற்றல்மிக்க முறையில் நினைவுகூரப்பட்டார்கள். ஆனால், கறுப்பு, பழுப்பு நிறத்தவர்களும் ஆசியர்களும் ஆப்பிரிக்கர்களும் அது சமமாக இல்லை. குறிப்பாக ஆப்பிரிக்கர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பது... மரணத்திலும் நிறவெறி... இது முழுக்க முழுக்க இழிவான செயல்," என்றார்.
பேரரசுச் சித்தாந்தத்தின் விளைவு
முதலாம் உலகப்போரைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் காலனிய அதிகாரிகளுக்கும் இருந்த பேரரசுச் சித்தாந்தத்தில் இந்த சமத்துவமின்மைக்கான வேர் இருக்கிறது என்று விசாரணைக் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சான்றாக, கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கல்லறை வளாகப் பதிவேட்டு அதிகாரி ஒருவர், "இறந்தவர்களை நினைவுகூர மையமான நினைவுச் சின்னங்களே பொருத்தமானவை. ஏனென்றால் பெரும்பாலான ஆப்பிரிக்கர்கள் இறந்துபோனவர்களின் கல்லறைகளுக்கு உணர்வார்ந்த மதிப்பளிப்பதில்லை," என்று சொன்னாராம்.
"இப்படிப்பட்ட வீசியடிக்கும் முடிவுகளுக்கு வருவது ஆப்பிரிக்காவில் கிறிஸ்துவ, இஸ்லாமிய மரபுகளுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகள், பண்பாடுகள், பழக்கவழக்கங்களின் நுட்பங்களைப் புறக்கணிக்கின்றன. இது சமத்துவமற்ற முறையில் நடத்தப்படுவதற்கான கொள்கைககளை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்கதொரு பங்காற்றுகிறது," என்று விசாரணைக் குழு கூறியுள்ளது.
இந்தக் கண்ணோட்டம்தான் பிரிட்டிஷ் அரசின் உயர்மட்டங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது. பிரிட்டனின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், காலனி நாடுகளுக்கான அரசுச் செயலராக இருந்தபோது, 1921ல், ஆப்பிரிக்க நாடுகளில் உயிரிழந்த ஆப்பிரிக்க வீரர்களுக்குத் தனித்தனிக் கல்லறைக் கற்களாக அல்லாமல், கூட்டு நினைவுச்சின்னங்கள் அமைக்க வேண்டும் என்று ஆணையிட்டார் என்று 'தி அசோசியேட்டட் பிரஸ்' தொகுப்பின் அடிப்படையில் தெரிவித்திருக்கிறது 'ஃபர்ஸ்ட் போஸ்ட்' செய்தித்தளம்.
சமரசம் உலாவும் இடம்?
விமர்சனங்களுக்குப் பலனில்லாமல் போகவில்லை. இப்போது ஆணையம் மன்னிப்புக் கோரியுள்ளது. "இந்த விசாரணை ஆவணத்தில் காணப்படும் வரலாற்றுத் தவறுகளுக்காகவும், இறந்தோரை சமமாக நடத்துதல் என்ற அடிப்படைக் கொள்கைக்கு ஏற்பச் செயல்படத் தவறியதற்காகவும் நாங்கள் தயக்கமின்றி மன்னிப்புக் கோருகிறோம்," என்று ஆணையம் தனது அறிக்கையில் கூறியிருக்கிறது. இரண்டு போர்களிலும் உயிரிழந்தோர் விவரங்களை முழுமையாகச் சேகரிப்பதற்கும், ஆவணப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கான ஆதாரங்களைக் கேட்பதில் வெளிப்படைத்தன்மையுமம் நெகிழ்வான அணுகுமுறையும் மேற்கொள்ளப்படும் என்று ஆணையம் அறிவித்துள்ளது.
பிரிட்டிஷ் அரசின் சார்பாகவும், காமன்வெல்த் போர் வீரர் கல்லறைகள் ஆணையத்தின் சார்பாகவும் மன்னிப்புக் கேட்டுள்ளார் பாதுகாப்புத் துறைச் செயலர் பென் வாலஸ், "அடிப்படைக் கொள்கைகளுக்கு ஏற்பச் செயல்படத் தவறியதற்காக மன்னிப்புக் கோர விரும்புகிறேன். நிலைமையை சரிசெய்வதற்கு இவ்வளவு நீண்ட காலம் ஆகிவிட்டதற்காக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என்று அவர் அறிவித்துள்ளார். "கடந்த காலத்தை நம்மால் மாற்றிவிட முடியாதுதான், ஆனால் நம்மால் திருத்தங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும்," என்றும் அவர் கூறியிருக்கிறார்.
"சமரசம் உலாவும் இடமே" என்ற புகழ்பெற்ற தமிழ் சினிமாப் பாட்டு நினைவுக்கு வருகிறது. 1956ல் வெளியான 'ரம்பையின் காதல்' படத்திற்காக மருதகாசி எழுதி டி.ஆர்.பாப்பா இசையமைத்து, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அந்தப் பாடல் பல ஆண்டுகள் காற்றில் உலா வந்தது. ஜாதியில் மேலோர், தாழ்ந்தோர், ஆண்டி, அரசன், அசடன், அறிஞன், தியாகி, போகி, யோகி என யாராக இருந்தாலும் ஆவி போனபின் கூடுகிற இடுகாடுதான் உண்மையில் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடம் என்று அதில் வருகிற வரிகள் இப்போது கேட்டாலும் ஆழ்ந்த சிந்தனைக்குள் இட்டுச்செல்கின்றன. உண்மையிலேயே இடுகாட்டிலும் சுடுகாட்டிலும் பேதமற்ற சமத்துவம் நிலவுகிறதா என்ற கேள்விக்குள்ளேயும் இட்டுச் செல்கின்றன. சுடுகாட்டுப் பாதையும் கூட மறிக்கப்படுகிற புண்ணிய பூமியல்லவா!
இங்கே மட்டுமல்ல, உலகெங்குமே கல்லறை வளாகங்களில் பாகுபாடுகள் புதைக்கப்படாமல் இருக்கிறது. இந்தச் செய்தி பகிரப்படுவதன் நோக்கம் தகவலறிவை வளர்ப்பது மட்டுமல்ல, மாற்றங்களை நிகழ்த்துகிற மனங்களை வளர்ப்பதும்தான். இறந்தவர்களுக்கான மரியாதையில் சமத்துவம் என்பது உயிரோடு வாழ்பவர்களுக்கான மரியாதையில் சமத்துவமாக உயிர்பெற வேண்டும்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications