For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பவானிசிங் நியமன வழக்கு: மூவர் பெஞ்ச் விசாரிக்க வேண்டிய முக்கியமான 2 பாயிண்டுகள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நியமித்தது செல்லாது என்று அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் தொடர்ந்த வழக்கில் இன்னும் உறுதியான உத்தரவு வரவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், அன்பழகன் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் டி.ஆர்.அந்தியர்ஜுனாவும் விகாஷ் சிங்கும் ஆஜராகி வாதாடினார்கள். கர்நாடகா அரசு சார்பில், மூத்த வழக்கறிஞர் எம்.என்.ராவ் ஆஜரானார்.

Supreme court Bench’s decision will decide pace of appeal verdict

ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமனும் மற்றவர்களுக்கு டி.கே.எஸ்.துள்சியும் ஆஜராகி வாதாடினார்கள்.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் லோக்கூர் மற்றும் ஆர்.ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. அதில் கடந்த 15ம் தேதி பரபரப்பான தீர்ப்பு வெளியானது. பவானி சிங் நியமனம் பற்றி இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால், தற்போது வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பவானி சிங்கின் நியமனம் செல்லாது என்று அறிவித்த நீதிபதி மதன் லோக்கூர் தீர்ப்பின் ஒரு முக்கிய பாயிண்ட் இதுதான்:

தமிழகத்தில் நடைபெற்று வந்த ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அதில் உத்தரவு வழங்கிய நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களையும் குறிப்பிட்டு இருந்தது.

அதில் அந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுவது எப்படி? அதற்காகச் சிறப்பு நீதிமன்றம் எந்த அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் தெளிவாகச் சொல்லப்பட்டு இருந்தது. அதோடு மிக முக்கியமாக, அந்த வழக்குக்கு அரசு வழக்கறிஞரை யார் நியமிக்க வேண்டும்? அதில் என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி அரசு வழக்கறிஞரை கர்நாடக அரசாங்கம்தான் நியமிக்க வேண்டும். அவருக்கான ஊதியத்தையும் கர்நாடக அரசே வழங்க வேண்டும். மேலும், அப்படி அரசு வழக்கறிஞரை நியமிக்கும்போது, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியோடு கலந்தாலோசித்து அவருடைய வழிகாட்டுதல்படி நியமனம் செய்ய வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

ஆனால், அந்த நடைமுறைகள் எல்லாம் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞரை நியமித்தபோது பின்பற்றப்படவில்லை. அரசு வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமிக்கவில்லை. அதற்காக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவும் இல்லை.

மாறாக தமிழக அரசு இந்த வழக்கில், அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு மாநிலத்தில் இருந்து ஒரு வழக்கு வேறொரு மாநிலத்துக்கு மாற்றப்பட்டுவிட்டால் அதில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை, ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் Vs ஸ்டேட் ஆஃப் தமிழ்நாடு வழக்கு தெளிவுபடுத்துகிறது.

அதன்படி, ‘ஒரு மாநிலத்தில் இருந்து ஒரு வழக்கை வேறொரு மாநிலத்துக்கு மாற்றிவிட்டால் வழக்கை மாற்றிக் கொடுத்த மாநிலம் அதில் நீண்ட காலத்துக்குத் தலையிட முடியாது. வழக்கை மாற்றிப் பெற்றுக்கொண்ட மாநிலம்தான், அதில் அதிகாரப்பூர்வமான முடிவுகளை எடுக்க வேண்டும். ஏனென்றால், வழக்கைப் பெற்றுக் கொண்ட மாநிலம்தான் தற்போது, அந்த வழக்கின் எல்லையாகத் திகழ்கிறது.

அதன்படி அரசு வழக்கறிஞரை நியமிக்கும் பொறுப்பும் கடமையும் கர்நாடகத்துக்குத்தான் உண்டு. இது அண்மையில் அலகாபாத் உயர் நீதிமன்றமும் டெல்லி உயர் நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படிச் சட்டமும் விதிகளும் தெளிவாக உள்ளன.

அதன்படி, இந்த வழக்கை மாற்றிப் பெற்றுக்கொண்ட மாநிலம் கர்நாடகம். சிறப்பு நீதிமன்றம் அமைந்ததும் அங்குதான். வழக்கு விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கியதும் கர்நாடகத்தில்தான் நடந்தது. குற்றவாளிகள் அதன் காரணமாக சிறையில் வைக்கப்பட்டு இருந்ததும் கர்நாடகத்தில்தான். தண்டனை பெற்றவர்களும் கர்நாடகத்தில்தான் மேல்முறையீடு செய்துள்ளனர்.

மேல்முறையீட்டு விசாரணையும் கர்நாடகத்தில்தான் நடந்து வருகிறது. அப்படி இருக்கும் நிலையில், அரசு வழக்கறிஞரை மட்டும் தமிழகம் எப்படி நியமிக்க முடியும்? அந்த முடிவை எடுக்கும் உரிமையும் அதிகாரமும் கர்நாடகத்துக்குத்தான் இருக்கிறது.

மேலும், இந்த வழக்கை ஏற்கெனவே நடத்தியவர் என்ற முறையில் பவானி சிங் எப்படி மேல்முறையீட்டு விசாரணையிலும் அரசு வழக்கறிஞராகத் தொடர முடியும்? ஏனென்றால், கர்நாடக அரசு அவரை அரசு வழக்கறிஞராக நியமித்தது சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு மட்டும்தான். அந்த விசாரணை நடந்து முடிந்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்கப்பட்டதோடு பவானி சிங்கின் நியமனமும் முடிந்துவிட்டது. அதன்பிறகு மேல்முறையீட்டிலும் அவரையே அரசு வழக்கறிஞராக நியமிக்க கர்நாடக அரசு எந்த புதிய உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. மாறாக, தமிழக அரசு அதைச் செய்துள்ளது. என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பில் கவனிக்கப்பட வேண்டியது, கர்நாடகாவில் நடக்கும் வழக்கிற்கு, தமிழகம் எப்படி வக்கீலை நியமிக்க முடியும் என்ற கேள்வியாகும்.

அதேநேரம், பவானி சிங்கை நியமித்தது செல்லும் என்ற நீதிபதி ஆர்.ஆர்.பானுமதியின் தீர்ப்பில் கவனிக்கவேண்டிய அம்சம்: அரசு வழக்கறிஞராக பவானி சிங்கின் நியமனம் என்பது சிறப்பு நீதிமன்றத்துக்கு மட்டும்தான். அங்கு வழக்கு முடிந்ததும் அவருடைய நியமனமும் முடிந்துவிட்டது என்பதையும் அவரை அரசு வழக்கறிஞராக நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதையும் அதற்கு கர்நாடக அரசுக்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது என்பதையும் நான் முழுமையாக ஏற்கிறேன்.

ஆனால், 301(1)சி.ஆர்.பி.சி சட்டம் ஒரு வழக்கின் ‘இன் சார்ஜ்' என்ற முறையில், யாருடைய எழுத்துபூர்வமான உத்தரவும் இல்லாமல், அந்த வழக்கின் மேல்முறையீட்டிலும் அவரே அரசு வழக்கறிஞராகத் தொடரலாம் என்ற உரிமையை வழங்குகிறது. ஹரியானா மாநிலம் Vs சுர்ஜித் சிங் வழக்கு இதற்கு முன் உதாரணமாக உள்ளது. எனவே, பவானி சிங் அரசு வழக்கறிஞராக நீடித்தது செல்லும். இவ்வாறு பானுமதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

இவரது தீர்ப்பில் கவனிக்க வேண்டியது, இன் சார்ஜ் என்ற வார்த்தையாகும். இதற்கு முன்னுதாரணமான வழக்கையும் நீதிபதி எடுத்து காட்டியுள்ளார். ஆனால், தனது தரப்புக்காக, ஜெயேந்திரர் வழக்கை, மதன் லோகூர் உதாரணமாக காண்பித்துள்ளார். இரு நீதிபதிகளுமே, முன் உதாரணங்களுடன் தீர்ப்பு அளித்துள்ளனர்.

எனவே, பிற மாநில அரசு வக்கீல் நியமனம் செய்யலாமா, இன்சார்ஜ் என்பவருக்கு அதிகாரம் உள்ளதா என்பதே தீபக் மிஸ்ரா தலைமையிலான, 3 நீதிபதிகள் விசாரிக்க வேண்டிய பாக்கியாகும். இரு நீதிபதிகள் பெஞ்ச் அளித்த மாறுபட்ட தீர்ப்பை தொடர்ந்து, மூவர் பெஞ்ச் அமைக்கப்பட்டு, நாளை அந்த பெஞ்ச் விசாரணையை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A decision by a Supreme Court Bench headed by Justice Dipak Misra on whether Bhavani Singh could continue as the Special Prosecutor in the disproportionate assets case will be crucial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X