For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

11.4 கோடி விவசாயிகளுக்கு ரூ.2.2 லட்சம் கோடி.. மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற 154 முக்கிய அறிவிப்புகள்!

மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற 154 முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு இதில் இடம்பெற்றுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் 11.4 கோடி விவசாயிகளுக்கு ரூ.2.2 லட்சம் கோடி வழங்கப்படும் என்பது உட்பட 154 முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டின் இடம்பெற்ற அறிவிப்புகள் முழுமையாக..

154 Announcements in the Union Budget 2023-24

1. மத்திய பட்ஜெட்டில் சப்தரிஷி முன்னுரிமைகள்:

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி;கடைசி நபரையும் சென்றடைந்தது;முதலீடு மற்றும் கட்டமைப்பு;ஆற்றல் மற்றும் வெளிக்கொணர்தல்;பசுமை வளர்ச்சி;இளைஞர் சக்தி;நிதித்துறை

2. தனிநபர் ஆண்டு வருமானம் கடந்த 9 ஆண்டுகளில் இரட்டிப்பாகி ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது.

3. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் சந்தாதாரர் எண்ணிக்கை இரட்டிப்பாகி 27 கோடியாக உயர்ந்துள்ளது.

4. உலகப் பொருளாதார நிலையில் இந்தியாவிற்கு ஒரு சிறப்பான இடத்தை வழங்கும் வகையில் நமக்கு ஜி-20 தலைமைப் பொறுப்பு கிடைத்துள்ளது.

5. நடப்பாண்டு வளர்ச்சி விகிதம் 7 சதவீத அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

6. வளமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி உறுதி செய்யப்படும்.

7. உலகளவில் 10-வது இடத்திலிருந்து கடற்த 9 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

8. உலகத்தரத்துடன் கூடிய தனித்துவம் வாய்ந்த டிஜிட்டல் புது உள்கட்டமைப்பு உருவாக்கப்படும்.

9. கொரோனா தொற்றின் போது ஒருவர் கூட பசியுடன் உறங்கச்செல்லக் கூடாது என்ற நிலைஉறுதிசெய்யப்பட்டது.

10. 220 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி 102 கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

11. பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் அடுத்த ஓராண்டிற்கு பொதுமக்களுக்கு வீடுகள் வழங்கும் பணிகளுக்கு முன்னுரிமை.

12. உலகளவில் 10-வது இடத்திலிருந்து கடந்த 9 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

13. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 11.7 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. உஜ்வாலா திட்டத்தின்கீழ் 9.16 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

14. 47.8 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 44.6 கோடி பேருக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

15. பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ் 11.4 கோடி விவசாயிகளுக்கு ரூ.2.2 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது

16. கிராமப்புறங்களில் வேளாண் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிப்பு.
17. 157 புதிய செவிலியர் கல்லூரிகள் உருவாக்கப்படும்.

18. 2047 ஆம் ஆண்டிற்குள் ரத்த சோகை நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
19. சேமிப்பு கிடங்குகள் பரவலாக்கத் திட்டம் செயல்படுத்தப்படும்.

20. உயர் மதிப்பிலான தோட்டப்பயிர்களை ஊக்குவிக்கும் வகையில் விதை நேர்த்தி செய்தல், தரமான நடவுக்கருவிகள் ஆகியவற்றை வழங்குவதற்கு ரூ.2,200 கோடி நிதிஒதுக்கீடு

21. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், முன்னுரிமை துறையில் நிலவும் கடன் பற்றாக்குறையை களைய தேசிய வீட்டுவசதி வங்கி மூலமாக நகர்ப்புற கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் ஏற்படுத்தப்படும்.

22. ஆன்லைன் மூலம் ஆவணங்களை பகிர்ந்துகொள்ள ஏதுவாக சிறு-குறு-நடுத்தர நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை அமைப்புகள் ஆகியவை பயன்படுத்தும் வகையில் டிஜி லாக்கர் முறை வலுப்படுத்தப்படும்.

23. புதிய தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் 5-ஜி தொழில்நுட்ப அடிப்படையிலான செயலி உருவாக்கங்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் 100 ஆய்வகங்களை ஏற்படுத்த முடிவு.

24. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒருகோடி விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு முடிவு. இதற்காக 10,000 உயிரி உள்ளீட்டு ஆதார மையங்கள் அமைக்கப்படும்.

25. 30 திறன் இந்தியா சர்வதேச மையங்கள் பல்வேறு மாநிலங்களில் இளைஞர்களின் திறனை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில் அமைக்கப்படும்.

26. நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யப்படும் பல்வேறு படிவங்களை கையாண்டு விரைவாக மதிப்பீடு செய்ய மத்திய செயலாக்க மையம் ஒன்று உருவாக்கப்படும்.

27. ஊரகப்பகுதிகளில் இளம் தொழில்முனைவோர் விவசாயம் தொடர்பான புத்தொழில்களை நிறுவ ஊக்கம் அளிக்கும் வகையில் வேளாண் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் நிதியம் உருவாக்கப்படும்.

28. இந்தியாவை சிறுதானியங்களின் உலகளாவிய மையமாக உருவாக்க ஹைதராபாதில் உள்ள இந்திய சிறுதானிய ஆய்வு மையத்திற்கு ஆதரவு அளிக்கப்படும்.

29. கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறைக்கு ரூ.20 லட்சம் கோடி வேளாண் கடன் வசதி.

30. பிரதமரின் மீன்வளர்ப்புத் திட்டத்தின்கீழ் ஒரு துணை திட்டம் உருவாக்கப்பட்டு ரூ.6,000 கோடி முதலீட்டில் மீனவர், மீன் விற்பனையாளர் மற்றும் சிறு நிறுவனங்கள் ஆகியோருக்கு உதவிகள் வழங்கவும், மதிப்புக்கூட்டு சங்கிலித் தொடரை விரிவாக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.

31. விவசாயிகளை முன்னிலைப்படுத்திய தீர்வுகளுக்கும், விவசாய தொழில்நுட்ப தொழில்துறை மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் வேளாண் துறைக்கான டிஜிட்டல் பொது கட்டமைப்பு உருவாக்கம்.

154 Announcements in the Union Budget 2023-24

32. 63,000 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் ரூ.2,516 கோடி செலவில் கணினி மயமாக்கப்படும்.

33. ஐசிஎம்ஆர் ஆய்வகங்கள் வாயிலாக ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக பொது தனியார் மருத்துவ ஆய்வுகளுக்கு ஊக்கம்.

34. மருந்து உற்பத்தித் துறையில் ஆராய்ச்சிகளை மேம்படுத்த புதிய திட்டம்.

35. வளர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும், தனியார் முதலீடுகளை அதிகரிக்கச் செய்யவும் மூலதன முதலீடுகள் ரூ.10 லட்சம் கோடி வரை ஆண்டுதோறும் 33 சதவீத அளவில் தொடர்ந்து 3-வது முறையாக அதிகரிப்பு.

36. சுகாதாரம், ஊட்டச்சத்து உள்ளிட்ட அத்தியாவசியமான அரசு சேவைகளை முழுமையான அளவில் வழங்கும் முன்னேற துடிக்கும் வட்டாரங்களுக்கான வளர்ச்சித் திட்டம். முதற்கட்டமாக 500 வட்டாரங்களுக்கு அறிமுகம்.

37. மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்கான திட்டமான பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ள பழங்குடியின மக்களுக்கான பிரதமரின் மேம்பாட்டுத் திட்டத்திற்கு அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு.

38. கட்டமைப்பு துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக புதிய உள்கட்டமைப்பு நிதிச்செயலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

39. ஆசிரியர் பயிற்சியில் துடிப்பான செயல்திறன் மிக்க நிறுவனங்களாக மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

40. ரூ.5,300 கோடி மத்திய அரசின் நிதியுதவியில் நுண்ணீர் பாசன மேம்பாட்டுத் திட்டம்.

41. ஒரு லட்சத்திற்கும் அதிகமான பழங்கால கல்வெட்டுகளை டிஜிட்டல் மயமாக்கி நாட்டின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் காட்சிப்படுத்தும் கல்வெட்டுகளுக்கான பாரத் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.

42. மத்திய அரசின் மூலதன செலவினங்கள் ரூ.13.7 லட்சம் கோடியாக இருக்கும்.

43. நீடித்த தன்மையுடன் கூடிய எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் நகரங்களாக உருவாக்கும் வகையில் நகர்ப்புற சீர்திருத்தங்கள் மற்றும் செயலாக்கங்களை மேற்கொள்ள மாநிலங்களுக்கும், நகரங்களுக்கும் ஊக்குவிப்பு.

44. மனிதனே மனிதக் கழிவுகளை அகற்றும் நிலையை மாற்ற அனைத்து பெரு நகரங்களிலும், நகர்ப்புறப் பகுதிகளிலும் 100 சதவீத இயந்திரப் பயன்பாட்டை உறுதிசெய்ய முடிவு.

45. லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் தங்களது திறமைகளை மேம்படுத்தி மக்கள் நலம் சார்ந்த அணுகுமுறையை மேற்கொள்ள தொடர் கற்றல் வாய்ப்புகளை வழங்கும் ஒருங்கிணைந்த ஆன்லைன் பயிற்சி தளம் ஐஜிஓடி கர்மயோகி தொடங்கப்பட்டுள்ளது.

46. வர்த்தகம் புரிதலை எளிமையாக்கும் வகையில் 39 ஆயிரத்திற்கும் அதிகமான நடைமுறைகள் நீக்கப்பட்டு, 3,400 சட்ட விதிமுறைகள் குற்றமற்றவைகளாக மாற்றப்பட்டுள்ளன.

47. நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தை உறுதிப்படுத்த 42 மத்திய சட்டங்களில் திருத்தம் செய்து ஜன் நம்பிக்கை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

48. ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களில் மாற்றங்களை மேற்கொள்ளவும், திருத்தங்கள் செய்யவும் தனிநபர் டிஜிலாக்கர் சேவை எனும் ஒற்றை நிறுத்தத் தீர்வு அறிமுகம்.

49. பெருங்தொற்று காலத்தில் ஒப்பந்தங்களை நிறைவேற்ற இயலாத சிறு குறு ஒப்பந்த நிறுவனங்களுக்கு அவற்றின் பிணை தொகையில் 95 சதவீதம் அல்லது செயல்திறன் உத்தரவாத தொகை அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் திருப்பி வழங்கப்படும்.

50. வளர்ச்சித் தேவைகளை சமாளிப்பதற்காக குறைவான நிதி ஆதார பிரச்சினையை சமாளிக்கும் விதமாக சிறப்பாக சேவையாற்றும் நிறுவனங்களை கண்டறிந்து நிதியுதவி அளிக்கும் திட்டம்.

51. மூன்றாம் கட்ட மின்னணு நீதிமன்றங்கள் அமைக்க 7,000 கோடி நிதி ஒதுக்கீடு.

52. இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைப்பதற்காக ஆய்வகங்களில் உருவாக்கப்படும் வைரங்கள் துறைக்கு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிதியுதவி.

53. படிம எரிபொருட்களை சார்ந்திருப்பதை குறைப்பதற்கும், குறைந்த கார்பன் உமிழ்வை உறுதி செய்யவும், 2030 ஆம் ஆண்டில் ஆண்டுதோறும் 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி இலக்கு.

54. எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய மின்சார பரிமாற்றத் துறைக்கு ரூ.35,000 கோடி நிதிஒதுக்கீடு.

55. நீடித்த வளர்ச்சிப்பாதை குறித்த பொருளாதாரத்தை ஊக்குவிக்க மின்கல எரிசக்தி சேமிப்பு முறைமைகள்.

154 Announcements in the Union Budget 2023-24

56. லடாக் ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொகுப்புக்கு ரூ.20,700 கோடி ஒதுக்கீடு.

57. மாற்று உரங்கள், சமச்சீரான ரசாயன உரங்களை பயன்படுத்தும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஊக்குவிக்க பிரதமர் - பிரணாம் திட்டம் தொடங்கப்படும்.

58. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பசுமை கடன் திட்டம் அறிவிக்கப்படும்.

59. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க குறைந்தபட்சம் 50 சுற்றுலாத்தலங்கள் தேர்வு செய்யப்படும்.

60. 'நம் நாட்டை காணுங்கள்' முன்முயற்சியை எட்ட குறிப்பிட்ட துறையில் பயிற்சி மற்றும் தொழில்முனைவு மேம்பாடு மேற்கொள்ளப்படும்.

61. எல்லையோர கிராமங்களில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் கட்டமைப்புத் திட்டங்கள் ஏற்படுத்தப்படும்.

62. மாநில தலைநகர்களிலும் முக்கிய சுற்றுலாத் தலங்களிலும் ஒரு மாவட்டம் ஒரு உற்பத்தி பொருள் என்பதை வலியுறுத்தும் ஒருங்கிணைந்த வணிக வளாக மையங்கள் ஏற்படுத்தப்படும்.

63. கிஃப்ட் ஐஎஃப்எஸ்சியில் தொழில் நடவடிக்கைகளை ஊக்குவிக்க பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

64. சிறப்புப் பொருளாதார மண்டல சட்டத்தின்கீழ் அதிகாரங்களை சர்வதேச நிதி சேவை ஆணையத்திற்கு வழங்குவதன் மூலம் இரட்டை கட்டுப்பாடு தவிர்க்கப்படும்.

65. ஆர்பிஐ, செபி, ஐஆர்டிஏஐ, ஐஎஃப்எஸ்சிஏ போன்றவற்றின் அனுமதி மற்றும் பதிவுக்காக ஒற்றைச்சாளர தகவல் தொழில்நுட்ப முறைமை அமைப்பு.

66. அந்நிய வங்கிக்கு ஐஎஃப்எஸ்சி வங்கி அலகுகளை வாங்க அனுமதித்தல்.

67. வர்த்தக மறு முதலீட்டுக்காக ஏற்றுமதி, இறக்குமதி வங்கி கிளையை உருவாக்குதல்.

68. பங்குச்சந்தை நடைமுறைகளை அறிந்துகொள்ளும் வகையில் தேசிய கல்வி நிறுவனம் அமைக்கப்படும்.

69. முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் வாயிலாக உரிமை கோரப்படாத பங்குகள் மற்றும் நிதி அளிக்கப்படாத ஈவுத்தொகை ஆகியவற்றை எளிதாகக் கோருவதற்கு ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தளம்.

70. ஒரேமுறை முதலீடு செய்யக்கூடிய புதிய சிறுசேமிப்புத் திட்டமான மகிளா சம்மான் சேமிப்பு திட்ட சான்றிதழ் தொடங்கப்படவுள்ளது. சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை முன்னிட்டு தொடங்கப்படும் இந்தத் திட்டத்தின்கீழ் பெண் குழந்தைகளின் பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் வரை வைப்புத்தொகையாக சேமிக்க இயலும். மார்ச் 2025 வரை அமலில் இருக்கக் கூடிய இந்தத்திட்டத்தின்கீழ் 7.5 சதவீத வட்டி வழங்கப்படும்.

71. பிரதமர் வீட்டுவசதி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 66 சதவீதம் அதிகரிக்கப்படும். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு தனியார் முதலீடுகள் அனைத்து துறைகளிலும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

72. வேளாண் கடன் இலக்கு 20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும்.

73. குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்.

74. மாநிலங்களின் மூலதன முதலீட்டுக்கு ஆதரவு அளிக்கப்படும்.

75. 100 முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

76. ரயில்வே துறை மேம்பாட்டிற்கு ரூ.2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.

77. வாடிக்கையாளரை அடையாளம் காணும் நடைமுறை KYC எளிமைப்படுத்தப்படும்.

78. 740 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகளில் 38,800 புதிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

79. ஒருங்கிணைந்த வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறை ஏற்படுத்தப்படும்.

80. கடலோரத்தில் உப்புத்தன்மை வாய்ந்த பகுதிகளில் அலையாத்தி காடுகளை மிஸ்டி என்ற பெயரில் வளர்க்க திட்டம்.

81. இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் புதிய கல்வி கொள்கையில் அம்ரித் பிதி திட்டம்.
82. புதிய பழகுநர் திட்டத்தின்கீழ் 47 லட்சம் இளைஞர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி.

83. தேசிய நிதித்தரவுகள் பதிவேடு ஏற்படுத்தப்படும்

84. பொது கட்டமைப்புக்கான கடன் நிர்வாக நடைமுறைகளுக்கான சட்டம் கொண்டுவரப்படும்.

85. ஏற்கனவே உள்ள வங்கிகள் சட்டம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கான சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்.

86. டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு முழு அளவிலான ஆதரவு

87. 2022 ஆம் ஆண்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 76 சதவீதம் அதிகரிப்பு. பரிவர்த்தனை மதிப்பு 91 சதவீதமாக அதிகரிப்பு.

88. மூத்த குடிமக்களுக்கான உச்சபட்ச டெபாசிட் 15 லட்சத்திலிருந்து ரூ. 30 லட்சமாக அதிகரிப்பு.

89. மாத வருமானம் கொண்ட வைப்புத் தொகைக்கான உச்சவரம்பு 4.5 லட்சத்திலிருந்து ரூ. 9 லட்சமாக அதிகரிப்பு.

90. மாநிலங்களுக்கான உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3.5 சதவீதம் அளவிற்கு பற்றாக்குறையை பராமரிக்க அனுமதி. இது 2024-26 ஆண்டுகளில் 5 சதவீதம் வரை பராமரிக்க அனுமதி.

91. கர்நாடக மாநிலத்திற்கு 5,300 கோடி ரூபாய் சிறப்பு நிதியுதவி

92. சிறு-குறு-நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.9000 கோடி தொகுப்பு நிதி.

93. மகளிருக்கான சேமிப்புத் திட்டம் மார்ச் 2025 வரை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

94. முக்கிய இடங்களில் 157 புதிய செவிலியர் கல்லூரிகள் நிறுவப்படும்

95. 2047 க்குள் அரிவாள் வடிவ செல் இரத்த சோகையை அகற்றுவதற்கான பணி தொடங்கப்படும்.பாதிக்கப்பட்ட பழங்குடியின பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

96. கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி விவசாய கடன் இலக்கு 20 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.

97. புதுமையான கற்பித்தல், தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாடு மற்றும் ICT செயல்படுத்தல் மூலம் ஆசிரியர்களின் பயிற்சி மறுசீரமைக்கப்பட வேண்டும்; மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் துடிப்பான சிறந்த நிறுவனங்களாக உருவாக்கப்படும்.

98. தேசிய கல்விக் கொள்கை (NEP-2020), கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான கற்றலில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான உத்திகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.

99. திருத்திய மதிப்பீடுகள் 2022-23: கடன்கள் தவிர மொத்த வருவாய் ரூ.24.3 லட்சம் கோடி. இதில் நிகர வரி வருவாய் ரூ.20.9 லட்சம் கோடி. ஒட்டுமொத்த செலவினம் ரூ.41.9 லட்சம் கோடி. இதில் மூலதனச் செலவு ரூ.7.3 லட்சம் கோடி. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 6.4 சதவீதம்.

100. பட்ஜெட் மதிப்பீடுகள்: கடன்கள் தவிர மொத்த வருவாய் ரூ.27.2 லட்சம் கோடி. ஒட்டுமொத்த செலவினம் ரூ.45 லட்சம் கோடி. நிகர வரி வருவாய் ரூ.23.3 லட்சம் கோடி. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 5.9 சதவீதம். பங்குப் பத்திரங்கள் மூலம் கடன்கள் ரூ.11.8 லட்சம் கோடி. ஒட்டுமொத்த சந்தை கடன்கள் ரூ.15.4 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

101. நேரடி வரிகள்: வரி விதிப்பில் தொடர்ச்சியையும், நிலைத்தன்மையையும் நோக்கமாகக் கொண்டு நேரடி வரிகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இணக்க சுமையை குறைக்கும் வகையில் வரி விதிப்பை எளிதாக்கி, சீரமைப்பதுடன், தொழில்முனைவு உணர்வை ஊக்குவிக்க மக்களுக்கு வரி நிவாரணம் வழங்கப்படுகிறது.

102. வரி செலுத்துவோருக்கான சேவைகளை இணக்க எளிமை மற்றும் சுமூக தன்மையுடன் மாற்ற வருமான வரித்துறை தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

103. வரி செலுத்துவோருக்கான சேவைகளை மேலும் முன்னேற்ற, அடுத்த தலைமுறை பொது வருமான வரி அறிக்கை தாக்கல் படிவம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

104. புதிய வருமான வரி திட்டத்தின்கீழ் ரூ. 7 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள தனிநபருக்கு வருமான வரி இல்லை. முன்னதாக இது ரூ.5 லட்சமாக இருந்தது.

105. 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய வருமான வரி திட்டத்தின்கீழ், 6 வருமான படி நிலைகள் இருந்தன. இவை தற்போது 5-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

ரூ. 3 லட்சம் வரை வரி இல்லை
ரூ. 3-6 லட்சம் வரை 5 சதவீதம்
ரூ. 6-9 லட்சம் வரை 10 சதவீதம்
ரூ. 9-12 லட்சம் வரை 15 சதவீதம்
ரூ. 12-15 லட்சம் வரை 20 சதவீதம்
ரூ. 15 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம்

106. புதிய தனிநபர் வருமான வரி திட்ட நடைமுறையில் ஊதியம் பெறும் தனிநபர்களுக்கு ரூ.50,000 நிலையான கழிவுத்தொகை அறிமுகம். குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.15,000 கழிவு அறிமுகம்.

107. அதிகபட்ச கூடுதல் வரி விகிதம் 37 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைப்பு. தனிநபருக்கான உச்சபட்ச வருமான வரி விகிதம் ஏற்கனவே உள்ளதிலிருந்து 39 சதவீதமாகக் குறைகிறது.

108. அரசு சாரா பணியில் இருக்கும் ஊதியம் பெறுவோருக்கு விடுப்பு பணமாக்கல் மீதான வரிவிலக்கு வரம்பு ரூ.25 லட்சம் வரை அதிகரிப்பு.

109. பொதுவாக புதிய வருமான வரி முறையே தேர்வாக இருக்கும். ஆனால், விருப்பப்படுவோர் பழைய வருமான வரி முறையை தெரிவு செய்து அறிவிக்க வேண்டும்.

110. குறு நிறுவனங்களுக்கும், சில தொழில்முறை வல்லுநர்களுக்கும் அனுமானம் அடைப்படையிலான வரி செலுத்துவதற்கான உச்சவரம்பை அதிகரிப்பதன் மூலம் பயனடைய இயலும்.

111. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் கொள்முதல் செய்து குறித்த நேரத்தில் அதற்குரிய தொகையை செலுத்தியிருந்தால், அது செலவினமாக எடுத்துக்கொள்ளப்படும்.

112. உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச வரி விகிதமான 15 சதவீதம் மார்ச் 2024 வரை உற்பத்தி நடவடிக்கைகளை தொடங்கும் கூட்டுறவு நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

113. கூட்டுறவு சர்க்கரை உற்பத்தி ஆலைகள் 2016-17 மதிப்பீட்டு ஆண்டுக்கு முன்னதாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்கிய தொகையை செலவீனமாக காட்ட அனுமதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் ரூ.10,000 கோடி நிவாரணம் கிடைக்கும்.

114. கூட்டுறவு சங்க உறுப்பினருக்கு ரொக்க வைப்புத் தொகையாக ரூ.2 லட்சம் வரை உச்சவரம்பு அளிக்கும் பிரிவும், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு வேளாண் மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகளில் பெற்ற கடனில் ரூ.2 லட்சம் வரை ரொக்கமாக திருப்பி செலுத்தவும் வகை செய்யப்பட்டுள்ளது.

115. கூட்டுறவு சங்கங்களில் ரொக்கமாக பணம் எடுப்பதற்கு வரி பிடித்த உச்சவரம்பு ரூ.3 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

116. புதிய புத்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வருமான வரி சலுகைகள் மார்ச் 2024 வரை நீட்டிப்பு.

117. புத்தொழில் நிறுவனங்கள் தங்களது நஷ்டத்தை ஈடுகட்டுவதற்கான காலம் 7 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக நீட்டிப்பு.

118. குடியிருப்புகளுக்கான முதலீட்டு ஆதாயத்திலிருந்தான கழிவு பிரிவு 54 மற்றும் 54-எஃப் பிரிவின் கீழ், உச்சவரம்பு ரூ.10 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

119. 2023 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு பிறகு செலுத்தப்படும் உயர் மதிப்பிலான காப்பீடுகளுக்கான பிரிமியம் தொகையில் ரூ.5 லட்சம் வரை வரி விலக்கு பெற அனுமதி.

120. பெரு நகரங்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளின் மேம்பாடு மற்றும் வீட்டுவசதி திட்டங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் மத்திய மாநில அரசுகளின் ஆணையங்கள் மற்றும் வாரியங்களின் வருமானங்களுக்கு வரிவிலக்கு.

121. ஆன்லைன் விளையாட்டுகளுக்கான குறைந்தபட்ச வருமான வரி பிடித்தம் செய்வதற்கான தொகை ரூ.10,000 ஆக நிர்ணயம்.

122. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை திரும்பப்பெறும் போது பான் அட்டை இல்லாதவர்களுக்கு வருமான வரி பிடித்தம் 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக்குறைப்பு.

123. சந்தை இணைப்பு கொண்ட கடன் பத்திரங்கள் மீதான வருமானங்களுக்கு வரி விதிக்கப்படும்.

124. வருமான வரித்துறை ஆணையர் மட்டத்தில் நிலுவையில் உள்ள சிறு மதிப்பிலான மேல்முறையீட்டு வழக்குகளின் சுமைகளை குறைக்கும் வகையில் 100 இணை ஆணையர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

125. இந்த ஆண்டு ஏற்கனவே மேல் முறையீட்டு மனுக்கள் மீதான ஆய்வுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

126. ஐஎஃப்எஸ்சி குறியீடுகள் வாயிலாக அனுப்பப்படும் தொகை மற்றும் கிஃப்ட் சிட்டி நகரத்திற்குள் மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்றத்திற்கான வரிப்பயன்கள் 2025 மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படும்.

127. வருமான வரிச்சட்டம் பிரிவு 276-ஏ-யின்கீழ் சில நடவடிக்கைகள் ஏப்ரல் 2023 முதல் குற்றமற்றவையாகக் கருதப்படும்.

128. ஐடிபிஐ வங்கி உட்பட நிறுவனங்களின் பங்குவிலக்கல் நடவடிக்கைகளில் ஏற்படும் நஷ்டங்களை அடுத்த சில ஆண்டுகளுக்கு கொண்டு செல்வதற்கு அனுமதி.

129. அக்னிவீர் நிதிக்கு முழு விலக்கு அளிக்கப்படும்.

130. மறைமுக வரிகள்: ஜவுளி மற்றும் வேளாண் பொருட்களைத் தவிர இதர பொருட்களுக்கான அடிப்படை இறக்குமதி தீர்வை 21 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாகக் குறைப்பு.

131. பொம்மைகள், சைக்கிள்கள், வாகனங்கள், நாப்தா உள்ளிட்ட சில பொருட்கள் மீதான அடிப்படை சுங்கத்தீர்வைகள், செஸ் தீர்வை மற்றும் கூடுதல் வரிகளில் சிறு மாற்றங்கள்.

132. ஜிஎஸ்டி செலுத்திய அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுக்கு கலால் வரியிலிருந்து விலக்கு.

133. மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் மின்கலன் உற்பத்திக்கு பயன்படும் மூலதனப் பொருட்கள் மற்றும் இயந்திரங்களுக்கு சுங்கத்தீர்வை விலக்கு. 2024 மார்ச் 31 வரை நீட்டிப்பு.

134. பரிசோதனை மற்றும் சான்றிதழ்களுக்காக குறிப்பிட்ட சில நிறுவனங்களிலிருந்து இதற்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள், டயர்கள் போன்றவற்றிற்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு சுங்கத் தீர்வையிலிருந்து விலக்கு.

135. செல்போன்களில் பயன்படுத்தப்படும் கேமரா லென்ஸ் மற்றும் இதர தொடர்புடைய உதிரி பாகங்களுக்கான இறக்குமதி தீர்வை ரத்து செய்யப்படுகிறது. செல்போன்களில் பயனாகும் லித்தியம் அயன் மின்கலன்களுக்கான வரிச்சலுகை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்படுகிறது.

136. தொலைக்காட்சி பெட்டி உதிரி பாகங்களுக்கான இறக்குமதி தீர்வை 5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாகக் குறைப்பு.

137. சமையலறை மின்சார புகைபோக்கி மீதான அடிப்படை சுங்கத்தீர்வை 7.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிப்பு.

138. சமையலறைகளில் பயன்படுத்தப்படும் மின்சார புகைபோக்கியின் உற்பத்திக்கு பயன்படும் உஷ்ண சுருள் மீதான அடிப்படை சுங்கவரி 20 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைப்பு.

139. ரசாயன தொழிலில் பயன்படுத்தப்படும் இயற்கை அல்லாத எத்தில் ஆல்கஹாலுக்கு அடிப்படை சுங்கத்தீர்வையிலிருந்து விலக்கு.

140. அமில அடிப்படையிலான கால்ஷியம் ஃப்ளோரைடு மீதான அடிப்படை சுங்கத்தீர்வை 5-லிருந்து 2.5 சதவீதமாகக் குறைப்பு.

141. ஜவுளி, காகிதம், மை தயாரிப்புக்கு பயன்படும் எபிக்ளோரோஹைடிரின் உற்பத்தி செய்வதற்கு தேவையான கச்சா கிளிசரினுக்கு அடிப்படை சுங்கத்தீர்வை 7.5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாகக் குறைப்பு.

142. இறால் தீவன உள்நாட்டு உற்பத்திக்கு தேவைப்படும் மூலப்பொருட்களுக்கான தீர்வை குறைப்பு.

143. ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் செயற்கை வைரங்கள் உற்பத்திக்கான அடிப்படை சுங்கத்தீர்வையும் குறைப்பு.

144. தங்கம் மற்றும் பிளாட்டினத்தால் செய்யப்படும் ஆபரணங்களுக்கு சுங்கத்தீர்வை அதிகரிப்பு.

145. வெள்ளிக்கான இறக்குமதி தீர்வை அதிகரிப்பு.

146. இரும்பு மற்றும் எஃகு உற்பத்திக்கான மூலப் பொருட்களுக்கு இறக்குமதி தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவது தொடரும்.

147. தாமிரக்கழிவுகளுக்கான 2.5 சதவீத சலுகை அடிப்படையிலான இறக்குமதி தீர்வை தொடர்கிறது.

148. கலப்பு ரப்பர் மீதான அடிப்படை இறக்குமதி தீர்வை 10 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அதிகரிப்பு.

149. குறிப்பிட்ட சிகரெட்டுகள் மீது 16 சதவீதம் பேரிடர் மேலாண்மை வரி விதிக்கப்படுகிறது.

150. சுங்கவரி விதிகளில் சட்டப்பூர்வ மாற்றங்கள்: தீர்வு ஆணையத்தில் இறுதி உத்தரவு பிறப்பிப்பதற்கு தாக்கல் செய்யப்படும் விண்ணப்பத் தேதியிலிருந்து வழங்கப்படும் 9 மாத கால அவகாசம் எது என வரையறுக்க சுங்கச்சட்டம் 1962-ல் திருத்தம் செய்யப்படும்.

151. சரக்கு குவித்தலுக்கு எதிரான வரி, கூடுதல் சுங்கவரி மீதான சுங்கத் தீர்வைக்கான கட்டண விகிதங்களில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

152. ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ் மேல்முறையீடு செய்வதற்கான குறைந்தபட்ச வரித்தொகை ஒரு கோடி ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயாக மாற்றுவதற்கு மத்திய ஜிஎஸ்டி வரிச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். கலவை வரியை தற்போதைய 50 முதல் 150 சதவீதத்திலிருந்து 25 முதல் 100 சதவீதமாகக் குறைக்கப்படும். குறிப்பிட்ட சில குற்றச்செயல்கள் குற்றமற்றவையாக மாற்றப்படும்.

153. ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ் விற்பனை அறிக்கை தாக்கல் செய்வதற்கான அதிகபட்ச காலவரம்பு 3 ஆண்டுகளாக கட்டுப்படுத்தப்படும்.

154. பதிவு செய்யாத விநியோகஸ்தர்கள் கலவை வரி செலுத்துவோர் மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு விநியோகத்தை மின்னணு வர்த்தகர்கள் மூலம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

English summary
The Union Minister of Finance and Corporate Affairs Nirmala Sitharaman presented the Union Budget 2023-24 in Parliament on Feb 1. The highlights of the Budget Here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X