பண்பாட்டு ஆய்வாளர் பேரா. தொ.பரமசிவன் ஏன் தமிழ்ச் சமூகத்தால் பெரிதும் கொண்டாடப்படுகிறார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆய்வாளர்கள் பொதுவாக உள்ளதை உள்ளபடி சொல்லிவிட்டு அல்லது எழுதிவிட்டு கடமையை நிறைவு செய்து கொள்வார்கள். ஆனால் ஆய்வுகளினூடே மக்களுக்கான அரசியலை பேசியவர் மறைந்த பேராசிரியர் தொ. பரமசிவன்.

நான் ஒரு கல்வெட்டு ஆய்வாளராக இருந்தால் அந்த கல்வெட்டின் காலம், எழுத்து வடிவம், அதன் உள்ளடக்க விவரங்கள், சிறப்பியல்புகள் என்ற வகையில் விளக்கி நிறைவு செய்து கொள்வேன்.

A Life History of Tamil scholar, Anthropologist Prof. Tho. Paramasivan (a) Tho.Pa

நான் ஒரு பழங்குடிகள் ஆய்வாளராக இருந்தால் அந்த ஆதிகுடிகளின் பூர்வோத்திரம் என்ன? வாழ்வியல், திருமண உறவு முறை, உணவு பழக்கம், இன்னமும் எஞ்சியிருக்கும் ஆதித் தன்மை என்ற வகையில் நின்று கொள்வேன்.

நான் ஒரு பகுத்தறிவாளனாக இருந்தால் நாத்திகம், பகுத்தறிவு, பகுத்தறிவாளர்களை வேட்டையாடிய மதங்கள் என்கிற வகையிலான பேச்சும் எழுத்துகளும் இருக்கும்.

நான் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்தால் தொழிலாளர் வர்க்கம், வர்க்க புரட்சி, மேல்கட்டுமானம், மாவோயிசம், லிபரேசன் என நீண்டு கொண்டு போகும்.

ஆனால் தந்தை பெரியார் ஒரு கலகக்காரராக இருந்தார்.. புரட்சியாளராக இருந்தார்.. ஒரு ஆய்வாளராக இருந்தார்.. ஒரு பகுத்தறிவாளராக இருந்தார். ஒரு கம்யூனிஸ்ட்டாகவும் இருந்தார்.

அந்த தந்தை பெரியாரின் வழி நின்ற ஒரு ஆய்வாளராக, கலகக் குரல் கருத்துகளை வெளிப்படுத்துவராக, பண்பாட்டு தளத்தில் பேரதிர்வுகளை உருவாக்கக் கூடிய இடிமுழக்கமாக இருந்தவர் பேராசிரியர் தொ. பரமசிவன்.

அழகர் கோவிலைப் பற்றியதாகத்தான் அவரது ஆய்வு இருந்தது. ஆனால் அழகர் கோவில் ஆய்வுகள் மூலமாக நம்மை அந்த காலத்துக்கே அழைத்துச் செல்வார்.. அரசியல், வாழ்வியல் என அந்த காலத்தின் அத்தனையையும் நமக்கு மிக மிக எளிய நடையில் ஒரு உரையாடும் நண்பனைப் போல தமது எழுத்துகளை வடிவமைத்தவர்.

பெரியாரை ஏற்றுக் கொண்டார்; மார்க்சியத்தை உள்வாங்கிக் கொண்டார்.. அதற்காக தமிழர்களின் பண்பாட்டு முறைகளை கண்மூடித்தனமான ஒரு வழிபாட்டு முறை என ஒதுக்கிவிடவில்லை. அதனை ஆய்வுக்குட்படுத்தினார். அப்படியான ஆய்வில்தான் தொ. பரமசிவன் சொன்னது, சுடலைமாடனும் காத்தவராயனும் வாழ்ந்த மனிதர்கள். மூதாதையர்களை வணங்குகிற நாட்டார் தெய்வங்கள் அல்லது குலதெய்வங்கள் தமிழ்ப் பண்பாட்டினது அங்கம் என்றார்.

அதேநேரத்தில் மிக அழகாகவே சுட்டியும் காட்டினார்... தந்தை பெரியார் பிள்ளையார் சிலையை உடைத்தாரே தவிர சுடலைமாடனை உடைக்கவில்லை; மாரியம்மாளை எதிர்க்கவில்லை. பெரியார், அதிகாரங்களை ஆதிக்கங்களை எதிர்த்தவர் என பட்டவர்த்தமான பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் பேசினார். பகுத்தறிவு என தட்டையாகப் பேசிக் கொண்டிருக்காமல் மக்களின் வாழ்வியல் அம்சங்களையும் கவனத்தில் கொண்டு தனது எழுதுகளத்தில் ஆட்டம் ஆடியவர் அய்யா தொ. பரமசிவன்.

நடிகர் கமல்ஹாசன், தொ. பரமசிவனை இப்போதும் கொண்டாடுகிறார்; அவர் உயிருடன் இருந்த போதும் பிக்பாஸில் கொண்டாடினார்.. ஆனால் கமல்ஹாசனான் கொண்டாடப்படுவதை அவர் உள்ளூர ஏற்காத ஒரு மனிதராக இருந்தார். ஏனெனில் அவர் அடிப்படையில் ஒரு கலகக்காரராகவும் திகழ்ந்தார்.

நான் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிலையத்தில் மாணவப் பருவத்தை நாள் ஒன்றுக்கு பலமணிநேரங்கள் செலவிட்டிருக்கிறேன். களப்பிரர் காலம் தொடங்கி எத்தனையோ நூல்களை மேஜை மீது பரப்பி வைத்து ஆய்வுக் குறிப்புகள் எடுத்து கொண்டே இருப்பேன். அங்கே ஆய்வுக்கு வந்தவர்கள் கூட என்னை ஆய்வாளனாகவே கருதியதும் உண்டு. ஆய்வுக் களம் என்பது ஒரு அறையில் அமர்ந்து கொண்டு நூல்களை ஆய்வு செய்து அதை தொகுப்பது என்பதாக ஒரு கட்டமைப்பு இருக்கிறது. ஆனால் தொ. பரமசிவன் கள ஆய்வுகளில் முதன்மையானவராக இருந்தார்.. முன்னோடியாக இருந்தார். மக்களிடம் நேரடியாக சென்று ஆய்வுகளை நிகழ்த்தியவர். இன்னும் சொல்லப் போனால் ஆய்வு முறைகளின் தன்மைக்கே புதிய வடிவத்தை பாய்ச்சியவர் பேராசிரியர் தொ. பரமசிவன்தான் என அடித்துச் சொல்லலாம்.

தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு வாழ்வியல் கூறையும் அக்கு வேறாக ஆணிவேறாக அலசி அதன் பூர்வோத்திரத்தை ஆதாரப்பூர்வமாக சொல்வார் தொ. பரமசிவன். மஞ்சள் பூசுதல், மஞ்சள் குளித்தல், வேப்பிலை, குளிக்கும் முறை என எதனையுமே விட்டுவைக்காமல் அலசி ஆராய்ந்து தமிழரின் யதார்த்த வாழ்வியலை அழகாக மெய்ப்பிப்பார் தொ. பரமசிவன்.

தொ.பரமசிவனைப் பொறுத்தவரையில் ஆய்வு முறைகள், எழுத்துகள், வாழ்க்கை முறை அனைத்திலும் அனைவருக்குமானவராக இருந்தார். சில அதிமேதாவிகளைப் போல பன்னாட்டு நிறுவனங்களின் நிதி உதவிக்காகவே என தன் ஆய்வு நூல்கள் வடிவங்களை உருவாக்கிக் கொள்ளவில்லை. மக்கள் எளிதாகப் படிக்க, மக்கள் எளிதாக புரிந்து கொள்ள, மக்களை எளிதாக சென்றடைய எத்தனை எளிய வடிவங்கள் இருக்கிறதோ அத்தனையையும் தமது ஆய்விலு வாழ்க்கையிலும் இம்மி பிசகாமல் வாழ்ந்து காட்டி மறைந்திருக்கிறார் தொ. பரமசிவன். மாணவர்கள், பேராசான்கள், நட்சத்திரங்கள் எல்லோருக்கும் சக நண்பனாகவே வாழ்ந்து மறைந்த நம் காலத்து ஆகச் சிறந்த பேராளுமையாளர் தொ. பரமசிவன். ஆகையால்தான் அவர் நம்மை விட்டு பிரிந்து போனதை ஏற்க இயலாமல் ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொருவரும் தொ. பரமசிவன் எனும் தொ.ப.வை கொண்டாடித் தீர்க்கிறோம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+