ஐடி வேலையை விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டும் பெங்களூர் பெண்.. வருமானம் பல மடங்கு அதிகம்!

  • பெங்களூர்: கைநிறைய சம்பளம், அலுவலக வேலை, நல்ல பணிச்சூழல் என ஐடி துறையில் பணியாற்றிய பெண் ஒருவர், அந்த வேலையை விட்டுவிட்டு தற்போது பெங்களூரில் ரேபிடோ ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். தனது வாழ்க்கையில் எடுத்த இந்த வித்தியாசமான முடிவுக்கான காரணத்தை அவர் பகிர்ந்துள்ள நிலையில், அவரது கதை பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

    Advertisement

    இந்த காலகட்டத்தில் ஐடி துறையில் வேலை செய்தால் மட்டுமே கை நிறைய சம்பாதிக்க முடியும் என்றில்லை. ஒறு வேலையில் முழு மனதோடு கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். இதற்கு நமது சமூகத்திலேயே ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கிறார்கள். அப்படி ஒரு பெண்ணின் கதை தான் இப்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

    Advertisement

    பாராட்டு

    அதாவது சமூக வலைத்தள பிரபலமான தன்வி ஆட்டோ ஓட்டி வரும் பெண்ணை சந்தித்து பேசியுள்ளார். அந்த உரையாடல் தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் டிரெண்டான பிறகே அவரது வாழ்க்கை பயணம் பலருக்கும் தெரிய வந்தது. ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த அந்த பெண்ணின் தந்தை உயிரிழந்ததை தொடர்ந்து, குடும்ப சூழல் முற்றிலும் மாறியுள்ளது. குறிப்பாக, இரவு நேர பணிகளுக்கு செல்வதுடன் வீட்டில் தாயையும் கவனித்து கொள்வது அவருக்கு மிகவும் சிரமமாக மாறியுள்ளது.

    இதனால் தொடர்ந்து ஐடி துறையில் பணியாற்றுவது தனக்கு செட் ஆகாது என்று முடிவு செய்த அவர், அந்த வேலையை ராஜினாமா செய்துள்ளார். அதன் பிறகு ஆட்டோ ஓட்ட முடிவு செய்துள்ளார். ஆட்டோ ஓட்டினால் எவ்வளவு நேரம் வேலை செய்யலாம்.. எப்போது வேலை செய்யலாம் என எல்லாமே தனது கண்ட்ரோலில் இருக்கும் என்பதாலேயே இதை முடிவு செய்துள்ளார். மேலும், வீட்டுக்கு அருகிலேயே இருந்து தாயையும் கவனித்து கொள்ள முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    எளிதான முடிவு இல்லை

    அதேநேரம் ஆட்டோ ஓட்டுநராக மாறுவது எளிதான முடிவாக இருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். குடும்பத்தினரும் முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும், தன்னுடைய சூழ்நிலையையும் குடும்பத்தின் தேவையையும் கருத்தில் கொண்டு, தனக்கு சரியானது என்று தோன்றிய முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், ஆட்டோ ஓட்டுவது எந்த வகையிலும் குறைவான தொழில் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஐடி நிறுவனத்தில் பணியாற்றியபோது கிடைத்த வருமானத்தைவிட தற்போது ஆட்டோ ஓட்டுவதன் மூலம் அதிகமாக சம்பாதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தனது முந்தைய பணியை பற்றி தெரிந்தவர்கள் பலரும் ஆச்சரியப்படுவதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். இந்தளவுக்கு சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய ஒருவர் எப்படி ஆட்டோ ஓட்டுகிறார் என்று கூட சிலர் கேட்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    பாராட்டு

    அந்த பெண்ணை தன்வி பாராட்டியுள்ளார். சமூகத்தின் எதிர்பார்ப்புகளை பற்றி கவலைப்படாமல் தனக்கான பாதையை அவரே தேர்வு செய்துள்ளதாக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். "மக்கள் என்ன சொல்வார்கள்?" என்பதை பற்றி நினைக்காமல்.. சுதந்திரத்தையும் தன்னம்பிக்கையையும் அவர் தேர்ந்தெடுத்ததாகவும், தனது வாழ்க்கையை தானே முடிவு செய்துள்ளதாகவும் தன்வி பாராட்டியுள்ளார்.

    நெட்டிசன்கள்

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரையும் கவர்ந்துள்ளது. தாயை இரவு நேரங்களில் தனியாக விட்டு செல்ல விரும்பாததால் எடுத்த முடிவை பலரும் பாராட்டியுள்ளனர். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "தாயை இரவு நேரத்தில் தனியாக விட்டுச் செல்லக்கூடாது என்று அவர் கூறிய விதம் நெகிழ வைத்துவிட்டது. உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்"" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

    English Summary

    Bangalore woman who previously worked in the IT sector has quit her job and become a Rapido auto driver(ஐடி வேலையை விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டும் இளம்பெண்): From IT to Auto, Woman’s journey went trending.