எங்க வயித்துல அடிக்காதீங்க.. போராட்டத்தில் குதித்த பத்திர எழுத்தர்கள்! வெறிச்சோடிய பதிவாளர் ஆபீஸ்கள்
சென்னை: பத்திரப் பதிவைத் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பத்திரம், நகல் எழுதுவோர் சங்கத்தினர் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால், தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் வெறிச்சோடின.
தமிழகத்தில் நிலம், வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்கும் போது, பத்திரப் பதிவுத் துறை மூலம் பதிவு செய்யப்படுகிறது. மேலும் ஏற்கனவே இருக்கும் வீடுகள் நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களும் பத்திரப் பதிவுத் துறை மூலம் ஒரு நபரிடம் இருந்து மற்றொருவருக்கு மாற்றப்படுகிறது.

பின்னர் அது வருவாய் துறை சார்ந்த ஆவணங்களில் பதியப்படுகிறது. இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்தில், ஆவணப் பதிவு மோசடி, போலி ஆவணம், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதை அடுத்து போலி ஆவணப் பதிவு உள்ளிட்டவற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பத்திரப் பதிவின் போது அசல் உரிமை மூல ஆவணத்தை தாக்கல் செய்யும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதேபோல், பத்திரப்பதிவுத் துறையில் பெரிய மாற்றமாக தமிழகத்தில் சொத்துக்களை வாங்குவதிலும் விற்பதிலும் உள்ள சிக்கல்களை குறைத்து, பதிவு துறையில் ஒரு மாபெரும் மாற்றத்தை கொண்டு வர "ஆளில்லா பதிவு" (Presenceless Registration) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், சொத்து வாங்குபவர்களும் விற்பவர்களும், குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைகள் தொடர்பான முதலாவது விற்பனையில், சார்பதிவாளர் அலுவலகங்களை நேரில் சென்று அணுகாமலேயே ஆன்லைன் மூலம் பதிவு செய்ய முடியும். இதற்காக ஸ்டார் 3.0 என்ற சாஃட்வேரும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பத்திரப்பதிவுத் துறையின் ஸ்டார் 3.0, வருகை இல்லா ஆவணப் பதிவு திட்டம், ஆன்லைன் பத்திரப்பதிவு, E-HUB திட்டம் மற்றும் பத்திரப் பதிவைத் தனியார் மயமாக்குதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழ்நாடு பத்திரம், நகல் எழுதுவோர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசின் இந்தத் திட்டங்களால் இத்தொழிலை நம்பியுள்ள ஐந்து லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படும் என்பதால், இத்திட்டங்களைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் பத்திர எழுத்தர்கள், நகல் எழுத்தர்கள், ஆவண எழுத்தர்கள் மற்றும் ஆவணத் தட்டச்சுப் பணியாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி, இன்று முதல் பணி புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்தப் பணி புறக்கணிப்புப் போராட்டம் காரணமாகத் தமிழகம் முழுவதிலும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்படுகிறது. சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்திருந்த போதிலும், தமிழ்நாடு பத்திரம், நகல் எழுதுவோர் சங்கத்தினரின் பணி புறக்கணிப்புப் போராட்டம் காரணமாகப் பத்திரப்பதிவு செய்ய பொதுமக்கள் யாரும் வரவில்லை. வழக்கமாகப் பொதுமக்கள் கூட்டத்துடன் பரபரப்பாகக் காணப்படும் சார்பதிவாளர் அலுவலகங்கள் இன்று கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.




Click it and Unblock the Notifications
