பெங்களூர்: கர்நாடகா வனத்துறை என்கவுண்டரில் தமிழகர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த அந்தோணி சாமியின் மனைவி லூர்துமேரி அளித்த புகாரின்பேரில் ஹனூர் போலீசார், வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் எங்களுக்கு நீதி வேண்டும் எனவும் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் அருகே உள்ள சக்கியா அருகே காவிரி வனவிலங்கு சரணலாயம் உள்ளது. இந்த சரணலாய பகுதியில் உள்ள மரிய மங்கலா வனப்பகுதியில் நேற்று முன் தினம் அதிகாலை 5 மணி அளவில் 3 பேரை கராடகா வனத்துறை சுட்டுக்கொலை செய்தது. மானை வேட்டையாடி இறைச்சியை கொண்டு சென்றதாக என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட பேரும் ஜான்ரோஸ் பீட்டர், செபஸ்டின் டேவிட் குமார், அந்தோணி சாமி என்பது தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரும் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்கள். ஈரோடு மாவட்டம் கோபி தாலுகாவை சேர்ந்தவர்கள் என்றும் 1958 ஆம் ஆண்டு கர்நாடகாவுக்கு குடி பெயர்ந்ததாகவும் உறவினர்கள் தரப்பில் கூறப்பட்டது. கர்நாடகா வனத்துறை என்கவுண்டரில் தமிழகர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே, வனத்துறை என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உடல்களை வாங்க மறுத்து ஹனூர் மற்றும் மைசூரு கே.ஆர் மருத்துவமனை முன்பு போராட்டம் தொடர்ந்தது. மலை மாதேஸ்வரா சாலையை மறித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மதியம் அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணமும், என்கவுன்ட்டர் குறித்து உயர்மட்ட விசாரணையும் நடத்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதல்வரிடம் பேசுவதாக எம்.எல்.ஏ மஞ்சுநாத் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட குடும்பத்தினர் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர். இதற்கிடையே வனத்துறையினர் என்கவுன்ட்டர் தொடர்பாக கொள்ளேகால் உதவி கலெக்டர் தினேஷ் குமார் மீனா தலைமையில் விசாரணை நடத்தவும், 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்கவும் சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீரூபா உத்தரவிட்டார். இந்த நிலையில் விசாரணை அதிகாரியான உதவி கலெக்டர் தினேஷ் குமார் மீனா, நேற்று தெற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. போரலிங்கய்யா, சாம்ராஜ்நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜ், மைசூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜூன பாலதண்டி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதைடுத்து ஹனூருக்கு சென்ற தினேஷ் குமார் மீனா, என்கவுண்ட்டர் வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கி உள்ளார். ஹனூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று வழக்கு தொடர்பான விவரங்களை கேட்டறிந்து கொண்டார். முன்னதாக, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த அந்தோணி சாமியின் மனைவி லூர்துமேரி அளித்த புகாரின்பேரில் ஹனூர் போலீசார், வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். டிகே. சிவக்குமார் மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறார். கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் ஹனூர் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் எங்களுக்கு நீதி வேண்டும் எனவும் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடலை வாங்க மறுத்து போராட்டம்
7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவு
கொலை வழக்காக பதிவு