"தங்கம் படுத்துடும்!" 2 முக்கிய சிக்னல் வந்தாச்சு.. ஆனந்த் சீனிவாசன் நறுக்.. பெரிய சம்பவம் இருக்கு
சென்னை: சர்வதேச அளவில் நடக்கும் சில மாற்றங்களை வைத்துப் பார்க்கும் போது இந்தாண்டு தங்கம் விலையில் மிகப் பெரிய மாற்றம் வரலாம் என்கிறார் ஆனந்த் சீனிவாசன். அமெரிக்காவில் கெவின் வார்ஷ் மத்திய வங்கி தலைவராக நியமிக்கப்பட்டதும், சீனா எடுத்துள்ள மிக முக்கியமான முடிவும் தங்கம் விலையில் முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும்.
தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் தொடர்கிறது. ஒரு நாள் ஏறினால் அடுத்த நாள் இறங்கிவிடுவது என்றே மாறி மாறி இருக்கிறது. இதனால் தங்கம் விலை நிலையாக இருக்கிறது. இருப்பினும், அடுத்த ஆறு மாதங்களில் தங்கம் விலையில் சில பல மாற்றங்கள் வரலாம் என்கிறார் ஆனந்த் சீனிவாசன்!

ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை இப்போது ஓரளவுக்கு நிலையாக இருக்கிறது. ஒரு நாள் ஏறினால் மறுநாள் இறங்குவது என மாறி மாறியே தங்கம் விலை இருக்கிறது. இப்படியே நீண்ட காலம் தொடர்ந்தால் ரூ.12,500 ஒரு வலிமையான பேஸாக மாறிவிடும். வெள்ளி விலை தொடர்ச்சியாகச் சரிந்து வருகிறது. வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கும் இடையே வெள்ளியில் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு வலி.. அதேநேரம் தங்கம் கொஞ்சம் நிலையாக இருக்கிறது. முன்பு போல உச்சத்திற்குப் போகவில்லை என்றாலும் ஓரளவுக்கு நிலையாக இருக்கிறது.
கெவின் வார்ஷ்
அடுத்து அமெரிக்க மத்திய வங்கி தலைவராகப் பதவியேற்கவுள்ள கெவின் வார்ஷ் இரண்டு முறை வட்டி குறைப்பு செய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அப்படி அவர் இரண்டு முறை வட்டியைக் குறைத்தால் தங்கம் விலை மீண்டும் எகிற வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மறுபுறம் அதே கெவின் வார்ஷ் அவர் முன்பு சொன்னது போலப் பணப் புழக்கத்தை டை செய்தார் என்றால் தங்கம் விலை இறங்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி மதில் மேல் பூனையாகத் தங்கம் இருக்கிறது. எந்தப் பக்கம் தாவும் என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
சீனா செய்த காரியம்
அடுத்து அமெரிக்கக் கடன் பத்திரங்களை வாங்கக்கூடாது என்று சீனா சொல்லியுள்ளது. இதுதான் திடுக்கிடும் தகவல்.. அமெரிக்கக் கடன் பத்திரங்களைச் சொத்தாக வைத்துக் கொள்ளக்கூடாது எனச் சொல்லி இருக்கிறார்கள். உலகத்திலேயே அமெரிக்கக் கடன் பத்திரங்கள் தான் பாதுகாப்பா கடன் பத்திரங்கள். ஏற்கனவே சீனா வசம் இருக்கும் அமெரிக்கக் கடன் பத்திரங்கள் குறைந்து கொண்டே போகிறது. இது அமெரிக்காவை மோசமாகப் பாதிக்கும்.
அமெரிக்கா பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரிக்கும்போது அந்தக் கடன் பத்திரங்களை வாங்க ஆள் தேவைப்படும். இந்த நேரத்தில் சீனா அதை வாங்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளது. ஜப்பான் ஏற்கனவே பிரஷரில் இருக்கிறது. இதனால் அமெரிக்க வட்டி விகிதம் டிரம்ப் நினைக்கும் அளவுக்குக் குறையாது.
மேலும், கெவின் வார்ஷ் அடிப்படையிலேயே ஒரு ஹாக். அதனால் அமெரிக்காவில் திரும்பி 0% வட்டி விகிதம் வரும் என்பதெல்லாம் சந்தேகம் தான். இதனால் அடுத்து இன்னொரு விஷயம் நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதாவது ஒருவேளை கெவின் வார்ஷ் பதவியேற்று, அவரும் ஆறு மாசம் கழித்து ஏதாவது பேசினாரென்றால் தங்கத்துக்கு ஆபத்து வரத்துக்கு வாய்ப்பு இருக்கு.
தங்கம் படுத்திடும்
அமெரிக்கக் கடன் பத்திரங்களை வாங்க ஆளில்லாமல் போனால் அதன் விகிதம் உயரும். அப்போது டாலர் மதிப்பு கூடும். தங்கம் கொஞ்சம் படுத்துவிடும். ஆனால், அது இன்றே நடக்கும் எனச் சொல்ல முடியாது. 5, 6 மாதங்கள் கழித்த நடக்க வாய்ப்பு இருக்கிறது. என்ன நடக்கும் என்பது நமக்கு உறுதியாகத் தெரியாது. கெவின் வார்ஷ் ஒரு சிக்னல், சீனாவின் இந்த நிலைப்பாடு ஒரு சிக்னல் அவ்வளவு தான்.
ஒரு விஷயத்தை நாம் உறுதியாகச் சொல்லலாம். கடந்தாண்டு வந்ததை போன்ற லாபம் தங்கத்தில் இந்தாண்டு வராது. கண்டிப்பாக வராது. 15 முதல் 20% லாபம் வந்தாலே பெரிய விஷயம்" என்றார்.












Click it and Unblock the Notifications