8 ஆண்டுகளில் 200% லாபம் கொடுத்த அரசு திட்டம்.. ஆனா இனிமேல் இதில் பணம் பார்க்க முடியாது! ஏன் தெரியுமா
மும்பை: யாராக இருந்தாலும் ரிஸ்க் இல்லாமல் நல்ல லாபம் தரும் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ரிஸ்க் இருக்கக்கூடாது என்றால் அரசுத் திட்டங்கள் தான் பெஸ்ட். ஆனால், அரசுத் திட்டங்களில் பெரிய லாபம் கிடைக்காது. இருப்பினும், அரசின் ஒரு திட்டத்தில் 8 ஆண்டுகளில் 200% லாபம் கிடைக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் பலரும் பணத்தைச் சேமித்து முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டனர். பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாகச் சரியான முறையில் பணத்தை முதலீடு செய்ய வேண்டியது அவசியமாகிறது. இல்லையென்றால் எவ்வளவு சேர்த்து வைத்தாலும் விலைவாசி உயர்வைச் சமாளிக்க முடியாமல் போய்விடும்.

ரிஸ்கும் லாபமும்:
பொதுவாக முதலீடு செய்வோர் இரண்டு விஷயங்களைப் பார்ப்பார்கள்.. முதலில் ரிஸ்க் இருக்கவே கூடாது.. அடுத்து லாபமும் அதிகமாக வர வேண்டும். ஆனால், உண்மையில் இரண்டும் ஒன்றாக இருக்கவே இருக்காது. ரிஸ்க் இருந்தால் தான் லாபம் கிடைக்கும். ரிஸ்க் இல்லையென்றால் பெரியளவில் லாபம் கிடைக்காது.
அதன்படி பார்த்தோம் என்றால் ரிஸ்க் இல்லாத முதலீடு என்றால் பெரும்பாலும் அது அரசின் திட்டங்களாகவே இருக்கும். ஏனென்றால் அரசு என்பது எப்போதும் திவால் ஆகாது. போட்ட பணம் நிச்சயம் திரும்ப வந்துவிடும். இருப்பினும், அரசுத் திட்டங்களில் நமக்குப் பெரியளவில் லாபம் கிடைக்காது. ஆனால், இந்த ஒரு திட்டத்தில் ரிஸ்கும் இல்லை.. லாபமும் 200% என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அரசு திட்டம்
கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் தங்கப் பத்திர திட்டம். எஸ்ஜிபி எனப்படும் Sovereign Gold Bondகளை மத்திய அரசின் சார்பாக ரிசர்வ் வங்கி வெளியிடும். இந்த தங்கப் பத்திரங்கள் 24 கேரட் தங்கத்தின் விலையுடன் இணைக்கப்பட்டு இருக்கும். தங்கம் விலை மார்கெட்டில் அதிகரித்தால் இதன் விலையும் உயரும். மார்கெட்டில் குறைந்தால் இதன் விலையும் குறையும். இதன் தான் தங்கப் பத்திரங்களின் அடிப்படை. இதுபோக ஆண்டுக்கு 2.5% வட்டியும் தருவதாக அறிவித்தனர்.
193% லாபம்
இதன் முதிர்வு காலம் 8 ஆண்டுகள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இப்போது முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட தங்கப் பத்திரங்கள் முதிர்ச்சி அடைந்து வருகிறது. அதில் தான் லாபம் கொட்டுகிறது. உதாரணமாக 2016-17 சீரியஸ் IV தங்கப் பத்திரங்கள் பிப்ரவரி 2017இல் கிராமுக்கு ரூ.2,943 என்ற விலையில் வெளியிடப்பட்டது. அப்போது தங்கம் விலை ரூ.8,624 (24 கேரட் தங்கத்தின் விலை) இதை வாங்கியவர்களுக்கு கிட்டதட்ட 193 சதவீத லாபம்.
தங்கப் பத்திரங்களின் முதிர்வு ஆண்டு தான் 8 வருடம். ஆனால், தேவை என்றால் 5 ஆண்டுகளிலேயே அதில் இருந்து விலகிக் கொள்ளலாம். அதன்படி செப்டம்பர்2019 இல் அதே ரூ.2943க்கு வெளியிடப்பட்ட 2019-20 சீரியஸ் IVஐ முன்கூட்டியே கொடுத்தாலும் இப்போது நமக்குக் கிராமுக்கு ரூ.8,634 கிடைக்கும். இதிலும் நமக்கு சுமார் 193% லாபம் கிடைக்கும்.
என்ன செய்யலாம்
தற்போதைய சூழல்களை வைத்துப் பார்த்தால் தங்கம் விலை இப்போதைக்குக் குறைவது போல தெரியவில்லை. தங்கப் பத்திரங்களை முன்கூட்டியே சரண்டர் செய்தாலும் சரி, முதிர்வு காலம் வரை வைத்திருந்தாலும் சரி வாடிக்கையாளர்களுக்கு லாபம் தான். எனவே, உங்களது பணத் தேவைகளைப் பொறுத்து முடிவு செய்து கொள்ளுங்கள்.
இனிமேல் முடியாது
என்னப்பா இது ரிஸ்க் இல்லாத இந்த திட்டத்திலேயே இவ்வளவு லாபமா.. எப்படி இதில் முதலீடு செய்யலாம்னு சொல்லி நானும் இப்போவே போட்டுவிடுகிறேன் என நீங்கள் கேட்டால்.. மன்னிக்கவும், இந்தாண்டிற்கான தங்கப் பத்திரங்களை மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் மத்திய அரசு புதிய தங்கப் பத்திரங்களை வெளியிடவில்லை. இது குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்ற போதிலும், தங்கப் பத்திரங்களைத் திட்டத்தையே மத்திய அரசு நிறுத்தி வைத்துவிட்டதாகவே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications