ஈரான் போர் நிறுத்தம்.. சடாரென சரிந்த 17 டாலர் கச்சா எண்ணெய் விலை.. இந்தியாவுக்கு கொண்டாட்டம்!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென குறைந்துள்ளது உலக நாடுகளை பெருமூச்சு விட வைத்துள்ளது ஈரான் போர் நிறுத்தம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதலில் இரண்டு வாரங்களுக்கு நிபந்தனையுடன் கூடிய போர் நிறுத்தத்தை அறிவித்ததே இதற்கு முக்கிய காரணம். இந்த அறிவிப்புக்குப் பிறகு சர்வதேச எண்ணெய் விலைகள் வேகமாக இறங்கியுள்ளன.
அமெரிக்காவின் 8 மணி கெடுவுக்கு முன்பு பாகிஸ்தான் முன்வைத்த 2 வார போர் நிறுத்தம் தொடர்பான யோசனை மொத்த கதையும் மாற்றியுள்ளது. நீண்ட ஆலோசனைக்கு பின்பு ஈரான் ஹார்மூஸ் திறந்தால் 2 வார போர் நிறுத்தம் தொடரும் என அமெரிக்கா தெரிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த ஒரு மணிநேரத்தில் ஈரான் தலைவர் முஜ்தபா காமேனி-யும் 2 வார போர் நிறுத்ததிற்கு ஒப்புதல் அளித்தார்.
அமெரிக்கா அறிவித்த உடன் கச்சா எண்ணெய் விலை தடாலடியாக குறைய துவங்கியது. ஈரான் அறிவிப்புக்கு பின்பு இன்னும் வேகமாக குறைய துவங்கியது.

கச்சா எண்ணெய் விலை எவ்வளவு குறைந்தது?
லண்டன் சந்தையில் வர்த்தகமாகும் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 15.21 சதவீதம் வீழ்ச்சியடைந்து ஒரு பேரலுக்கு 91.93 டாலர் வரை குறைந்தது. அமெரிக்காவில் வர்த்தகமாகும் WTI கச்சா எண்ணெய் விலை இன்னும் அதிகமாக 16.40 சதவீதம் குறைந்து 91.21 டாலருக்கு குறைந்தது. இந்த வீழ்ச்சி சந்தைக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது WTI கச்சா எண்ணெய் 96.43 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 94.80 டாலருக்கும் வர்த்தகமாகி வருகிறது.
பழைய படி வரவில்லை
இன்றைய வீழ்ச்சிக்குப் பிறகும் கச்சா எண்ணெய் விலை பிப்ரவரி 28 அன்று மோதல் தொடங்கியபோது இருந்த விலையை விட இன்னும் கணிசமாக அதிகமாகவே உள்ளது. அதாவது, போர் நிறுத்த அறிவிப்பு விலையை சற்று தளர்த்தியிருந்தாலும், முழுமையான இயல்பு நிலைக்கு இன்னும் வரவில்லை.
மத்திய கிழக்கு மோதலின் பாதிப்பு
கடந்த பிப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றம் உலக எண்ணெய் சந்தையை பெரிதும் பாதித்தது. ஹார்முஸ் நீரிணை போக்குவரத்து பாதைகளில் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்திருந்தது. இந்த நிலையில் டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தம் சந்தையில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்து என்ன நடக்கும்?
போர் நிறுத்தம் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே என்பதால், இந்த அறிவிப்பு தற்காலிக நிம்மதியை மட்டுமே தருகிறது என்று பலர் கருதுகின்றனர். அமெரிக்கா - ஈரான் மத்தியிலான நிபந்தனைகள் நிறைவேறினால் மட்டுமே நீண்டகால அமைதி சாத்தியம். எனவே, அடுத்த இரண்டு வாரங்களில் நிலைமை எப்படி மாறுகிறது என்பதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது.
பாகிஸ்தானில் இரு நாடுகளும் ஏப்ரல் 10ஆம் தேதி பேச்சுவார்த்தையில் ஈடுப்பட உள்ளது.
இந்த விலை வீழ்ச்சி இந்தியா போன்ற அதிக எண்ணெய் இறக்குமதி சார்ந்த நாடுகளில் பெட்ரோல், டீசல் விலையை சற்று தளர்த்த வாய்ப்பு உள்ளது. எளிய மக்களின் அன்றாட செலவில் இது சிறிய அளவில் நிம்மதியை ஏற்படுத்தலாம். இருப்பினும், நிலைமை இன்னும் நிலையற்றதாகவே உள்ளது என்பதால், வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலையில் மேலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம் என்று சந்தை கண்காணிப்பாளர்கள் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications