கைகட்டி நிற்கும் அதிகாரிகள்! FILE மூவ் ஆகல! முடங்கிய சென்னையின் பிக் ப்ராஜக்ட்ஸ்.. விஜய் கவனிப்பாரா?
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு அமைந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும், புதிய அமைச்சரவைக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படாததால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலப்பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன.
நிதித்துறை மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களின் கொள்கை ரீதியான ஒப்புதல் (Administrative & Financial Sanction) கிடைக்காததால், புதிய டெண்டர்களைக் கோர முடியாமல் அதிகாரிகள் கைகட்டி நிற்கும் நிலை உருவாகியுள்ளது.

Greater Chennai Corporation (GCC), சென்னை மெட்ரோ வாட்டர், நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை (PWD) ஆகிய முக்கிய அரசுத் துறைகளின் கோப்புகள் தற்போது அமைச்சர்களின் கையெழுத்துக்காகக் காத்திருக்கின்றன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திட்டங்கள், விதிமுறைகள் விலக்கப்பட்ட பின்னரும் அமைச்சரவை முழுமை பெறாததால் தொடர்ந்து முடக்கத்திலேயே நீடிக்கின்றன. அவசர கால பணிகளைத் தவிர, பெரிய அளவிலான உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் எதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யவோ அல்லது புதிய அரசாணைகளை வெளியிடவோ தற்போதைய சூழலில் வழிவகை இல்லை.
முடங்கியுள்ள முக்கிய திட்டங்களும் அதன் பட்ஜெட்டும்:
சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டிய பல நூறு கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புப் பணிகள் தற்போது முடங்கியுள்ளன. அதில் முக்கியப் பணிகள் பின்வருமாறு:
முக்கியச் சாலைகள் சீரமைப்புப் பணிகள்: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட உட்புற மற்றும் பிரதான சாலைகளை மறுசீரமைக்கும் பணிகள் முடங்கியுள்ளன. இதன் தோராய மதிப்பு ₹100 கோடி ஆகும்.
மழைநீர் வடிகால் (SWD) விடுபட்ட இணைப்புகள்: பருவமழைக்கு முன்னதாக முடிக்கப்பட வேண்டிய விடுபட்ட மழைநீர் வடிகால் இணைப்புகளைக் கட்டும் பணிகள் முடக்கப்பட்டுள்ளன. இதன் திட்ட மதிப்பு சுமார் ₹75 கோடி.
33 முக்கியக் கால்வாய்களைத் தூர்வாருதல்: சென்னையின் வெள்ளப் பாதிப்பைத் தடுப்பதற்கான 33 பிரதான கால்வாய்களைத் தூர்வாரும் முக்கியப் பருவக்காலப் பணி முடங்கியுள்ளது. இதன் திட்ட மதிப்பு ₹100 கோடி.
திடக்கழிவு மேலாண்மைத் தனியார்மயம் (தொண்டையார்பேட்டை & அண்ணா நகர்): சென்னை மாநகராட்சியின் இரு முக்கிய மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மையைத் தனியார்மயமாக்கும் மெகா திட்டம் முடங்கியுள்ளது. இதன் தோராய மதிப்பு ₹2,500 கோடி.
நடைபாதை வணிக வளாகம் (Pedestrian Plaza) மற்றும் நடைபாதை திட்டங்கள்: பாண்டி பஜார் பாணியில் நகரின் பிற முக்கியப் பகுதிகளில் திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்புப் பணிகள் முடங்கியுள்ளன. இதன் திட்ட மதிப்பு ₹200 கோடி.
டெண்டர்கள் முழுமையாக முடக்கம்:
கடந்த மே 11-ஆம் தேதியிலிருந்து சென்னை மாநகராட்சி தரப்பில் வெறும் 40 சிறிய அளவிலான அவசரக்கால டெண்டர்கள் மட்டுமே கோரப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கப்படும் சிறிய தொகையிலான பணிகள் ஆகும். சேதமடைந்த தெருப் பெயர் பலகைகளை மாற்றுவது, நடைபாதைகளில் விடுபட்ட பேவர் பிளாக்குகளைப் பதிப்பது மற்றும் தற்காலிகமாக வாகனங்களை வாடகைக்கு எடுப்பது போன்ற சிறிய பணிகளே இதில் அடங்கும். மாநகராட்சியின் முக்கியக் கருவூலத்திலிருந்து பெரிய நிதிகள் எதுவும் இதற்காகப் பயன்படுத்தப்படவில்லை.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வட்டாரத்தினர் பேசிய போது, "வழக்கமாக முதலமைச்சர் பதவியேற்ற உடனேயே அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுவிடும். ஆனால் இந்த முறை ஏற்பட்டுள்ள தாமதம் சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகளை முற்றிலும் முடக்கியுள்ளது. நிதித்துறை மற்றும் எங்களின் தாய் துறையான நகராட்சி நிர்வாகத் துறையின் ஒப்புதல் இல்லாமல் எங்களால் எப்படிப் புதிய திட்டங்களை முன்மொழியவோ அல்லது டெண்டர்களை கோரவோ முடியும்? நாங்கள் திட்டங்களை அனுப்பினாலும், கொள்கை ரீதியான முடிவு எடுக்க அமைச்சர்கள் இல்லாததால் அவை நிராகரிக்கப்படவே வாய்ப்புகள் அதிகம். எனவே அரசு உடனடியாக அமைச்சரவையை இறுதி செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மற்றொருபுறம், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத்துறை கடந்த மார்ச் 27-க்குப் பிறகு ஒரு புதிய டெண்டரைக் கூட அறிவிக்கவில்லை. சென்னை பெருநகர வளர்ச்சி முகமை (CMDA) சாத்தான்காட்டில் உள்ள இரும்பு மற்றும் எஃகு சந்தை வளாகத்திற்குப் பாதுகாப்புச் சேவைகள் வழங்குவதற்கான ஒரே ஒரு சிறிய டெண்டரை மட்டுமே வெளியிட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) எல்.இ.டி விளக்குகள் மற்றும் மின்விசிறிகள் கொள்முதல் செய்வதற்கான இரண்டு மிகச்சிறிய டெண்டர்களை மட்டுமே கோரியுள்ளது.
அதிகாரத்துவத் தேக்கம் மற்றும் ஆவின் பால் விலை குழப்பம்:
அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகா ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இந்த தாமதம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியிலும் ஒருவித தேக்க நிலையை உருவாக்கியுள்ளது. புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றவுடன் பெரிய அளவில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் (Bureaucratic Reshuffling) இருக்கலாம் என்பதால், அதிகாரிகள் எந்தவொரு முக்கியக் கொள்கை முடிவுகளையும் எடுக்காமல் பணிகளைத் தள்ளிப்போட்டு வருகின்றனர். இருப்பினும், இடைக்கால ஏற்பாடாக, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தத்தமது தொகுதிகளில் கள ஆய்வுகளை மேற்கொண்டு, உள்கட்டமைப்புத் தேவைகள் குறித்த விரிவான அறிக்கையைத் தயார் செய்யுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
இந்த நிர்வாக முடக்கம் நகர்ப்புற உள்கட்டமைப்பைத் தாண்டி அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் அமுல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு ₹2 உயர்த்தியதைத் தொடர்ந்து, அரசு நிறுவனமான 'ஆவின்' பால் விலையையும் உயர்த்த வேண்டுமா என்பது குறித்த ஆலோசனை தொடங்கிஉள்ளது . இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சருடன் விவாதித்து, பின்னர் முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பதால், எந்தவொரு முடிவும் எடுக்க முடியாமல் ஆவின் நிர்வாகம் தவித்து வருகிறது.












Click it and Unblock the Notifications