ரூ.15.15 லட்சம் கோடி எங்கே? பங்குச்சந்தையை உலுக்கிய 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' மோசடி.. என்ன நடந்தது?!

  • இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய தங்க சுத்திகரிப்பு மற்றும் ஆபரண உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' (Rajesh Exports Ltd), தற்போது இந்திய கார்ப்பரேட் வரலாற்றிலேயே மிகப்பெரிய கணக்கு மற்றும் நிதி மோசடிப் புகாரில் சிக்கி ஒட்டுமொத்த முதலீட்டாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    இந்நிறுவனம் கடந்த சில நிதியாண்டுகளில் தனது கணக்கு வழக்குகளில் பல லட்சம் கோடி ரூபாய் வருவாயை உண்மைக்கு மாறாக மிகைப்படுத்திக் காட்டியுள்ளதாக (Revenue Inflation) செபி (SEBI) கண்டுப்படித்த நிலையில், அதிரடியாக இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

    Advertisement

    இதன் காரணமாக இன்று மும்பை பங்குச்சந்தையில் (BSE) ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 5 சதவீதம் சரிந்து, லோயர் சர்க்யூட் ஆகி ரூ.104.65 என்ற விலையைத் தொட்டு முதலீட்டாளர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    என்ன நடந்தது? 109 பக்க செபி இடைக்கால உத்தரவு

    கடந்த மார்ச் 2024 இல் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் ஒருவர் அளித்த ரகசியப் புகாரின் அடிப்படையில் தான் இந்த ஒட்டுமொத்த விவகாரமும் வெடித்ததுள்ளது. அந்தப் புகாரில், நிறுவனத்தின் கணக்குப் புத்தகங்களில் பல ஆண்டுகளாக வர வேண்டிய வர்த்தகக் கணக்குகள் (Trade Receivables) பெருமளவில் நிலுவையில் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

    Advertisement

    இதனைத் தொடர்ந்து, செபி அமைப்பு 'பிடிஓ இந்தியா சர்வீசஸ்' (BDO India Services) என்ற Forensic Auditor நிறுவனத்தை நியமித்து கடந்த 2021 முதல் 2025 வரையிலான நிதியாண்டுகளின் கணக்குகளைத் தீவிரமாக ஆய்வு செய்தது.

    இந்த நீண்ட கால ஆய்வின் முடிவில், ஜூன் 3 ஆம் தேதி இரவு செபி 109 பக்கங்கள் கொண்ட அதிரடி இடைக்கால உத்தரவை (Interim ex-parte order) பிறப்பித்துள்ளது. அதில், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது கணக்குகளில் காட்டியுள்ள ஒட்டுமொத்த வருவாயில் 97% முதல் 99% வரையிலான வர்த்தகம் முற்றிலும் உண்மைக்கு மாறானது, மிகைப்படுத்தப்பட்டது என்று அறிவித்துள்ளது.

    Advertisement

    மேலும் நிதிப் பரிமாற்றங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் செபி முதற்கட்ட ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது. கார்ப்பரேட் உலகில் "இதுவரை கேள்விப்படாத ஒரு அசாத்திய மோசடி" என்றும் செபி-யின் முக்கிய தலைவர் கமலேஷ் சந்திர வர்ஷ்னி இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

    இதன் காரணமாக, நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான ராஜேஷ் மேத்தா பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கவோ, விற்கவோ அல்லது வர்த்தகம் செய்யவோ தற்காலிகமாக அதிரடித் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

    ரூ.15.15 லட்சம் கோடி கணக்கு முரண்பாடு

    இந்த ஒட்டுமொத்தப் புகாரின் மையப்புள்ளியாக இருப்பது 15.15 லட்சம் கோடி ரூபாய் என்ற மாபெரும் தொகை. கடந்த 2021 முதல் 2025 வரையிலான நிதியாண்டுகளில் இந்நிறுவனம் பெற்ற 15.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வருவாய் முற்றிலும் பொய்யானது என செபி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

    Advertisement

    2015ஆம் ஆண்டில் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உலகின் முன்னணி தங்க சுத்திகரிப்பு ஆலையான 'வல்காம்பி' (Valcambi SA) நிறுவனத்தை 400 மில்லியன் டாலருக்குக் கைப்பற்றி உலக தங்க வர்த்தகச் சந்தையில் தடம் பதித்தது.

    செபியின் தற்போதைய ஆய்வு முடிவுகளில், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் காட்டிய ஒட்டுமொத்த வருவாயில் 97% முதல் 99% வரையிலான வர்த்தகம் இந்த வல்காம்பி போன்ற வெளிநாட்டுத் துணை நிறுவனங்கள் மூலமாகவே வந்துள்ளதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது.

    ஆனால், சுவிட்சர்லாந்தின் வல்காம்பி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வத் கணக்குகளை (Audited standalone financial statements) ஆராய்ந்த போது, அதில் மிகக் குறைந்த அளவிலான வருவாய் மட்டுமே பதிவாகியுள்ளது அம்பலமாகியுள்ளது.

    Advertisement

    உதாரணத்திற்கு, 2023 ஆம் ஆண்டில் வல்காம்பி நிறுவனம் வெறும் ரூ.543 கோடி மட்டுமே தனிப்பட்ட வருவாயாகக் காட்டியிருந்த சூழலில், அதன் தாய் நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் தங்களின் ஒருங்கிணைந்த வருவாயில் வல்காம்பி மூலம் பல லட்சம் கோடி ரூபாய் வந்ததாகக் காட்டியுள்ளது.

    இந்த இடைவெளியில் தான் சுமார் 15.15 லட்சம் கோடி ரூபாய் வருவாய் எவ்வித முறையான ஆதாரங்களும், வாடிக்கையாளர் விபரங்களும் இன்றி போலியாக மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளதாகச் செபி குற்றம் சாட்டியுள்ளது.

    எல்லாம் பொய்.. கம்யூனிகேஷன் கேப்!

    செபியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் மேத்தா ஜூன் 4ஆம் தேதி தனது விளக்கத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். "செபி பிறப்பித்துள்ளது வெறும் இடைக்கால உத்தரவு மட்டுமே, இதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மையில்லை" என்று அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    மேலும் நிறுவனம் வெளியிட்டுள்ள பிஎஸ்இ (BSE) செய்திக்குறிப்பில், "எங்கள் நிறுவனம் அறிவித்துள்ள அனைத்து வருவாய் விபரங்களும் 100% சரியானவை, எங்கும் வருவாயை நாங்கள் மிகைப்படுத்திக் காட்டவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.

    செபி அமைப்பிற்கும் எங்கள் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட சில தகவல் தொடர்பு இடைவெளி (Communication Gap) மற்றும் புரிதல் குறைபாடு காரணமாகவே இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கான அனைத்து உண்மையான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கணக்கு ஆவணங்களையும் செபியிடம் சமர்ப்பித்து வருகிறோம் என்றும், விரைவில் இந்தச் சர்ச்சை முடிவுக்கு வரும் என்றும் ராஜேஷ் மேத்தா தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    India’s leading gold exporter Rajesh Exports is under massive scrutiny after SEBI’s interim order alleged that the company inflated revenue by nearly ₹15.15 lakh crore over multiple years. The stock hit lower circuit at ₹104.65 amid investor panic, while the company claims it is a communication gap and vows to submit all proof.