கைகொடுத்த தென்மேற்குப் பருவமழை: அரிசி உற்பத்தி அதிகரிப்பு - தமிழகத்தில் விலை சரிவு


சென்னை: தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத சரிவடைந்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்ததால் நெல் உற்பத்தி அதிகரித்து அரிசி வரத்தும் அதிகரித்துள்ளது.

தென்னிந்தியர்களின் முக்கிய உணவுப்பொருள் அரிசிதான். அரிசியில் பல ரகங்கள் உள்ளன. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சியால் காவிரி டெல்டாவில் விவசாயம் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டனர். 2015ஆம் ஆண்டு சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. 2016ல் வர்தா புயல் ஆகியவற்றால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டது.

கடந்தாண்டு இறுதியில் வடகிழக்கு பருவமழை, சீராக பெய்து விவசாயத்திற்கு உதவியது. இதனால் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நெல் விளைச்சல் அதிகரித்தது. தமிழகத்திற்கு தேவையான அரிசி உற்பத்தியில் 60 சதவிகிதம் தமிழகத்தில் நடைபெறும் விவசாயம் மூலம் கிடைக்கிறது. மீதமுள்ள 40 சதவிகித அரிசி ஆந்திரா, கர்நாடகா என பிற மாநிலங்களில் இருந்து கிடைக்கிறது.

தென்மேற்குப் பருவமழை

இந்த ஆண்டு அதிக அளவில் தென்மேற்குப் பருவமழை பெய்தது. கர்நாடகா, கேரளாவில் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தென்மேற்குப் பருவமழையால் தமிழக தென் மாவட்ட அணைகள் நிரம்பி வழிகின்றன. கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு தமிழகத்துக்குத் தேவையான நீர் வந்தடைந்தது. இதனால் தமிழகத்திலும் நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது.

அரிசி உற்பத்தி அதிகம்

கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நெல் விளைச்சல் அதிகரித்து அந்த மாநிலங்களிலிருந்து அரிசி மூட்டைகள் வரத்து அதிகமாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

அரிசி விலை வீழ்ச்சி

ரூ.1,150க்கு விற்கப்பட்ட ஆந்திரா ஸ்டீம் அரிசி ரூ.1,050 ஆகவும், ரூ.1,000க்கு விற்கப்பட்ட ஆந்திரா ஸ்டீம் அரிசி ரூ.900 ஆகவும், ரூ.1,250க்கு விற்கப்பட்ட கர்நாடக ஸ்டீம் அரிசி ரூ.1,150 ஆகவும், ரூ.1,100க்கு விற்கப்பட்ட கர்நாடக ஸ்டீம் அரிசி ரூ.1,000 ஆகவும், ரூ.700க்கு விற்கப்பட்ட இட்லி அரிசி ரூ.600 ஆகவும் குறைந்துள்ளது.

தொடரும் விலை சரிவு

தமிழகத்தில் விற்கப்படும் 25 கிலோ மூட்டை அரிசியின் விலை ரூ.50 முதல் ரூ.100 வரை குறைந்துள்ளது. தமிழகத்தில் ரூ.700க்கு விற்கப்பட்டு வந்த ஏ.டி.டி. 47 ரக பொன்னி அரிசி தற்போது ரூ.630 ஆகவும், ரூ.750க்கு விற்கப்பட்ட கோ.51 பொன்னி அரிசி ரூ.570 ஆகவும், ரூ.900க்கு விற்கப்பட்ட டீலெக்ஸ் பொன்னி அரிசி ரூ.800 ஆகவும் குறைந்துள்ளது. நெல் அறுவடை முடிந்து வரும் மாதங்களில் இன்னும் விலை சரியக்கூடும் என்று தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் தெரிவித்துள்ளதால் நுகர்வோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Have a great day!
Read more...

English Summary

This year, there has been an excessive rainfall during the southwest monsoon season, especially in the southern states of Karnataka and Kerala. Kerala was flooded and inundated. Because of the excess rain and water supply the yield of this years rice crop has increased considerably.